அம்பாறை மாவட்டம் நாவிதன் வெளி பிரதேச சபையின் எதிர்வரும் 2020 ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்,  ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டது. நாவிதன் வெளி பிரதேசசபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் சபையின் 22ஆவது சபை அமர்வு திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

வரவு செலவுத்திட்டத்தினை அவைக்குச் சமர்ப்பித்த தவிசாளர், கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றியதுடன் எதிர்வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் உரையாற்றினார். 

நிலைபேறான அபிவிருத்தியாகக் கட்சி அரசியலுக்கு அப்பால் பிரதேச மக்களின்  பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு ஜனநாயகப் பண்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத்திட்டத்தினை சகலரும் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் எதிர்கால சபை நடவடிக்கை குறித்து தங்களது ஆலோசனைகளை முன்வைத்தனர் . 

பதிலளித்த தவிசாளர், தொடர்ந்து உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள நல்ல விடயங்களை எமது சபை நடவடிக்கையில் உள்வாங்கிக்கொள்வதில் இச்சபையின் காத்திரம் அதிகரிக்கும் என்பதில் அதீத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆகவே சகலரும் ஐக்கியத்தினை வெளிப்படுத்தி சபையினை முன்கொண்டு செல்வது காலத்தின் அவசியம் என தெரிவித்துள்ளார்.

 .சபையில் பிரசன்னமாகியிருந்த கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சுயேட்சைக்குழு மற்றும் ,ஐக்கிய தேசிய கட்சி, ஆகியவற்றின் உறுப்பினர்கள் தாம் வரவு செலவுத்திட்டத்தினை ஏற்றக்கொள்வதாக ஏகமானதாக ஆதரவு தெரிவித்தனர்.

 இதன் பின்னர் எமக்குக் கருத்து தெரிவித்த தவிசாளர் தவராசா கலையரசன்

  நாவிதன் வெளி பிரதேச சபையின் 2020 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எங்களது பிரதேச சபையை பொருத்தவரையில் கௌரவ உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகப் பிரதேச மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் கருத்தில் கொள்வோம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.எமது பிரதேசத்தில் பிரதானமாகக் காணப்படுவது குடிநீர்ப் பிரச்சினை இந்த குடிநீர் பிரச்சினை பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும்   இன்னும் பல பிரதேசங்களுக்கு முற்றாகக் குடிநீர்   முற்று முழுதாக  வழங்கப்படாமல் இருக்கின்றது.

 புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள்  பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார் . இந்த நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  தமிழ் மக்களின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் உரிமை சார்ந்த விடயங்களிலும் கவனம் செலுத்துவார் என்று நினைக்கின்றோம். அதுமட்டுமல்ல இளைஞர் ,யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு , இப் பிரதேச மக்கள் காலா காலமாக மழைக் காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினையாகக் கிட்டங்கி பிரதான பாதையூடாக செல்லும் ஆபத்து நிறைந்த போக்குவரத்து பிரச்சினை இவற்றை விரைந்து தீர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.