வவுனியாவில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் அரச திணைக்களங்கள் ஒத்துழைப்பின்றி செயற்பட்டு வருவதாகவும் அவர்களிற்கு எதிராக உடனடியாக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தொற்றா நோய் தடுப்பு பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ். லவன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் டிசம்பர் மாதம் 16ம் திகதி வரையான  16 நாட்களில் 171 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இந்த அதிகரிப்பானது இம்மாதம் 300 பேர் வரை எதிர்பார்க்க கூடியதாக இருக்கும்.

வவுனியாவில் ஐந்து மாத குழந்தை ஒன்றும் டெங்கினால் உயிரிழந்துள்ளது. இந்நிலையில் டெங்கு ஒழிப்புக்கு பொதுமக்கள் தம்மாலான பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. எனினும் அரச திணைக்களங்கள் மற்றும் விடுதிகளே பிரச்சனையாக உள்ளது. அவர்களது ஒத்துழைப்பு மிகவும் குறைவாக உள்ளது. 

திணைக்களங்களில் இருந்து பிரதிநிதிகளை இவ்விடயமாக பிரேரிக்குமாறு கேட்ட போதிலும் மூன்று திணைக்களங்கள் மாத்திரமே விபரங்களை அனுப்பியுள்ளது.

எனவே இது தொடர்பாக அரச அதிபர் தலைமையில் 3 கூட்டங்கள் நடத்தப்பட்டும் ஏதுவான செயற்பாட்டை அரச திணைக்களங்கள் எடுக்காமையினால் நாளையில் (18.12) இருந்து வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். இதனைத்தவிர வேறு வழி எமக்கு இல்லை எனவும் தெரிவித்தார். 

இந் நிலையில் அரசாங்க அதிபர் இவ்விடயம் தொடர்பாக அரச திணைக்களங்கள் கரிசனை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.