(எம்.மனோசித்ரா)

கண்டியிலிருந்து கொழும்பு ஊடாக களனி பாலத்திற்கு உட்புகும் இரு வழிபாதையில் ஒரு பாதையின் நிர்மாணப் பணிகளின் பொருட்டு நாளை காலை 6 மணிமுதல் தற்காலிகமாக மூடப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

இப்பாதையில் பயணிக்கும் வாகனங்களை மட்டுப்படுத்தும் நடவடிக்கையினை இத்திட்டத்தின் முன்னோடி பரீட்சார்த்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக நாளை ஒரு வழிக்காட்டி பாதையில் இலங்கை பொலிஸார் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர். 

இத்திட்டத்திலுள்ள குறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னர் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் நிர்மாணப் பணிகளுக்காக இப்பாதையில் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு வழி பாதைக்கு மட்டுப்படுத்தப்படும்.

இவ்வீதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இலகு வாகனங்கள் மற்றும் பஸ்கள் கொழும்பு நோக்கி பயணிப்பதற்காக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதையின் பெலிகொட இடமாறலை மாற்று பாதையாக உபயோகிக்க முடியும். 

மேலும் பாரஊர்திகள் மற்றும் கனரக வாகனங்கள் கொழும்பு - நீர்கொழும்பு(A03)வீதியை மாற்று வழி பாதையாக உபயோகிக்க முடியும்.