(எம்.மனோசித்ரா)

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் மாத்திரமே பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை குறைக்கப்படும். மாவிற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது என்பதற்காக பேக்கரி உற்பத்திகளின் விலை குறைக்கப்பட மாட்டாது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயரத்ன தெரிவித்தார். 

இறக்குமதி செய்யப்படுகின்ற கோதுமை மாவிற்காக ஒன்றிணைந்த தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இறக்குமதி செய்யப்படுகின்ற கோதுமை மாவிற்கான ஒன்றிணைந்த தீர்வை வரி நீக்கப்பட்டு 8 ரூபாய் விஷேட வர்த்தக பொருட்கள் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இலங்கையில் கோதுமை மா கனிசமானளவே இறக்குமதி செய்யப்படுகின்றது. 

உள்நாட்டு கோதுமை மாவே பெரும்பாலானோரால் கொள்வனவு செய்யப்படுகிறது. மாறாக இறக்குமதி செய்யும் கோதுமை மாவை கொள்வனவு செய்பவர்களும் விநியோகிப்பவர்களும் அதற்கான விலையை குறைத்தால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் மாற்றம் ஏற்படலாம். 

இது இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவை கொள்வனவு செய்யும் பேக்கரி உரிமையாளர்களுக்கு மாத்திரமே பொறுந்தும் என்பதே எமது நிலைப்பாடாகும். உள்நாட்டு கோதுமை மாவை கொள்வனவு செய்யும் பேக்கரி உரிமையாளர்கள் மாவின் விலை குறைக்கப்பட்டால் மாத்திரமே பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பர். 

எனவே இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா அன்றி உள்நாட்டு கோதுமை மாவின் விலை தொடர்பில் முடிவேதும் எடுக்கப்பட்டால் மாத்திரமே பேக்கரி உற்பத்திகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என்றார்.