பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் கிழக்குப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தாவோ நகரிலிருந்து 90 கிலோ மீற்றர் தூரத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளியாக அமைந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 எனப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 3 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆறு பேர் வரை இறந்திருக்கலாம் எனவும் 30 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தையடுத்து அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள ஐந்தாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.