(எம்.மனோசித்ரா)

திருகோணமலை லங்காபட்டுன பிரதேசத்தில் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இலங்கையின் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. அதற்கமைய கடற்படையினரால் திருகோணமலை, லங்காபிட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அந்த பெட்டிகளுக்குள் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 110 கிலோ கிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கடற்படையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதை அறிந்து வெடிபொருட்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட மீன் தொகையை பற்றைக்குள் மறைத்து வைத்து சந்தேகநபர்கள் தப்பித்திருக்கலாம் என்று கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட மீன் தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு வெடிபொருட்களை பயன்படுத்தி சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் வளங்கள் பாதிப்புக்குள்ளாகின்றமை அதிகரித்துள்ளது. இதனால் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளின் தொடர்ந்தும் கடற்படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.