பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள வட கடல் (நோர்த் சீ) நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைக்கவிருப்பதாக கற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வட கடல் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் கடற்றொழில் நீரக வள மூலங்கள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (16.12.2019) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பாரிய நஷ்டத்தில் இயங்கி வருகின்ற வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தனக்கு கிடைக்கும் தகவல்கள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட கடல் நிறுவனமும் ஊழியர்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் சுட்டிக் காட்டினார்.

மேலும், குறித்த நிறுவனம் பாரிய நஷ்டத்தில் இயங்குவதற்கும் உற்பத்தி செயற்பாடுகள் வீழ்ச்சியடைவதற்குமான காரணங்களை அறிந்து கொள்வதற்காக விசேட விசாரணைக் குழுவை நியமிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, தற்போது வட கடல் நிறுவனத்திடம் இருக்கின்ற வளங்களை பயன்டுத்தி மேற்கொள்ளக் கூடிய அதிகபட்ச செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையினை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.