ஜனாதிபதி கோத்தாபயவின் வரலாறு மற்றும் அவரது எண்ணப்பாடுகள் எப்படியானதாக இருந்த போதிலும் தனக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத என அனைவருக்குமான ஜனாதிபதியாக தனது ஆட்சிக்காலத்தில் செயற்பட வேண்டியிருக்கின்றது.
தனக்கு வாக்களித்தவர்களை மாத்திரமன்றி வாக்களிக்காதவர்களைக் கூட தனது மக்களாக கருதி செயற்பட வேண்டியிருக்கின்றது. ஜனாதிபதியின் வெற்றிக்கு பங்களித்தவர்கள் சிங்கள பௌத்த மக்களாவர். சிங்கள பௌத்தர்களில் 25 வீதமானவர்களும் தமிழர் மற்றும் முஸ்லிம்களும் அவருக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். எனினும் அவர் தனக்கு சாதகமாக வாக்களித்த சிங்கள மக்களுக்கு மாத்திரமன்றி தனக்கு எதிராக வாக்களித்த தமிழ், முஸ்லிம் இனத்தவருக்கும் ஜனாதிபதியாவார்.
புதிய ஜனாதிபதி பாரிய வெற்றியினைப் பெற்றுக்கொண்டிருந்தாலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்வதில் தோல்வி கண்டதானது அவரது வெற்றியில் தனித்துவமானதும் வரையறுக்கப்பட்ட ஒன்றாகவும் கருதலாம். இலங்கை போன்ற பல்லினங்கள் வாழ்கின்ற நாடு ஒன்றில் இன மத பேதங்கள் இன்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒருவரே தலைவராக அமைய வேண்டும். இலங்கை இதுவரை காலமும் அது போன்ற தலைவர்களை உருவாக்கவும் தவறியிருக்கின்றது. சிங்கள வாக்குகளால் மாத்திரம் தெரிவான போதிலும் சிங்கள பௌத்தருக்கு மேலதிகமாக தமிழ், முஸ்லிம் இனத்தவர்களினதும் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெறுகின்ற ஒரு தலைவராக இருக்க முடியுமானால் மாத்திரமே அவர் வெற்றிகரமான தலைவர் ஒருவராக கருதப்பட முடியும்.
தேசிய ஒற்றுமை என்பது நாட்டின் அபிவிருத்தியில் மிக முக்கியமாக செல்வாக்குச் செலுத்தும் ஒன்றாக காணப்படுகின்றது. தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கான நோக்கமிருப்பின் அதனை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ள ஒருவரால் மாத்திரமே வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். மாறாக சிங்கள பௌத்தர்களால் மதிக்கப்படாத ஒருவரினால் இந்த செயற்பாட்டை மேற்கொள்வது சாத்தியமானதாக அமையாது. இந்த நியதியினை மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் தமிழ்க் கூட்டமைப்பு தலைவரிடமிருந்தே (சம்பந்தன்) கற்றுக்கொண்டேன்.
ஜனாதிபதியின் எண்ணப்பாடு
ஜனாதிபதி பதவிப்பிரமாணத்திற்காக ருவன்வெலிசாயவை தெரிவு செய்ததானது சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட பாதகமான சைகையொன்றாக குறிப்பிட முடியும் என்ற போதிலும் வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு அங்கீகாரமளித்ததன் ஊடாக வடக்கிற்கு வழங்கியிருக்கின்ற சாதகமானதொரு சைகையாகக் குறிப்பிடலாம். வடக்கின் பிரபாகரன் மாத்திரமன்றி, தெற்கின் விஜேவீரவும் தீவிரவாத தலைவர்களாகவே நோக்கப்பட வேண்டும். விஜேவீர மற்றும் ஜே.வி.பி கலவரத்தின்போது உயிர் நீத்தவர்களை நினைவு கூருவதற்கு
தெற்கில் தடைகள் இல்லையெனில் பிரபாகரன் அல்லது குறித்த கலவரத்தில் உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதற்காக வடக்குப் பகுதியில் தடைகள் காணப்பட முடியாது. தெற்கின் சிங்கள கலவரக்காரர்களாகட்டும் வடக்கின் தமிழ் கலவரக்காரர்களாகட்டும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கலவரங்களை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது என்பதுடன் குறித்த கலவரங்கள் முறியடிக்கப்பட்டதன் பின்னர் கலவரத்தில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்கள் நெறிபிறழ்ந்துவிட்டாலும் இந்த நாட்டின் குடிமக்களாகவே கருதப்படல் வேண்டும். விஜேவீர மற்றும் பிரபாகரன் என்பவர்கள் பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காகவே நினைவுகூரப்படுகின்றனர் என்ற போதிலும், கலவரங்களில் உயிரிழந்தவர்களின் தாய்,தந்தையர்கள் மற்றும் சகோதரர்களால் அவர்களது அன்புக்குரியவர்களின் பிரிவு குறித்தே நினைவுகூரப்படுகின்றதே தவிர, அதில் அரசியல் காரணங்கள் காணப்படுவதில்லை.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ
2005 முதல் 2015 வரையான பத்தாண்டுகள் இந்த நாட்டை ஆட்சிசெய்த மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரர் என்ற போதிலும், புதிய ஜனாதிபதி அந்த அடையாளத்திலிருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ள முயற்சிப்பது அண்மைக்கால அவரது நடவடிக்கைகள் ஊடாக அவதானிக்க முடிகின்றது. ராஜபக் ஷ குடும்பத்தின் அடையாளமாக அணியப்பட்டு வருகின்ற சிவப்பு நிற சால்வையை புதிய ஜனாதிபதி அணியவில்லை. தனக்கு பழக்கமான அரைக்கை சட்டையும் நீளகாற்சட்டையையுமே உத்தியோகபூர்வ உடையாக பயன்படுத்துகின்றார். அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ பயணத்தின் போது கூட அந்த உடையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. ஜனாதிபதி மாளிகையைப் பயன்படுத்தாமை, பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைத்தல், ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் ஊழியர் தொகை குறைப்பு, தனது புகைப்படங்களை அரச நிறுவனங்களில் காட்சிப்படுத்த தடை விதித்தல், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச வாணிப நிலையங்களுக்கான பணிப்பாளர்களாக அரசியல் அல்லக்கைகள் நியமிக்கப்படுகின்ற நடைமுறையை மாற்றி, தகைமையுடையவர்கள் நியமிக்கப்படும் முறை ஒன்றினை உருவாக்கியமை ஆகியன மதிக்கப்பட வேண்டியதும் பாராட்டப்படவேண்டியதுமான விடயங்களாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் சட்டத்துக்கு முரணாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாராளுமன்றம் பாதிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணமாக காணப்படுகின்றது. இது முக்கியமாகவே தடுக்கப்பட வேண்டிய விடயமாகும். அது போன்று அமைச்சர்களுக்கு அவர்களின் அமைச்சுக்குரிய பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற காரியாலய அலுவலர்களுக்கு மேலதிகமாக அமைச்சர்களினாலும் பிரத்தியேகமாக அலுவலர்களை நியமித்துக் கொள்வது தொடர்பான உரிமையும் நீக்கப்படவேண்டிய ஒன்றாகும். அதுபோன்ற நடவடிக்கைகளை உலக நாடுகளில் காணமுடிவதில்லை என்பதுடன், அமைச்சர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு தொழில் மற்றும் நலன்களை பெற்றுக்கொடுக்கின்ற இந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் நாடு பாரிய ஒரு செலவினை பொறுப்பேற்க வேண்டியிருக்கின்றது. அத்துடன் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான சட்டமும் அமுல்படுத்தப்படல் வேண்டும். வேண்டுமென்றே உண்மையை மறைக்கின்ற அடிப்படையில் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான தகவல் வழங்காமல் இருப்பவர்களுக்கான தண்டனையாக ஒரு மில்லியன் ரூபா அபராதமும் ஒரு வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்.
கட்டாக்காலி நாய்கள்
விகாரமகாதேவி பூங்காவிலிருந்து நாய்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடும் பதிவொன்றும் கட்டாக்காலி நாய்களைப் பாதுகாத்தல் தொடர்பான கருத்துக்கள் பலவும் சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக காணக்கிடைத்தன. கட்டாக்காலி நாய்கள் தொடர்பான பிரச்சினையும் இலங்கையின் தீர்க்கப்படவேண்டி பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகின்றது.
இலங்கையில் இருக்கின்ற நாய்களின் தொகை 25 இலட்சம் என்பதாக கணிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 30 வீதமானவை உரிமையாளர்கள் இல்லாத கட்டாக்காலி நாய்களாகும். அந்த வகையில் கட்டாக்காலி நாய்களின் தொகை 750,000 இருக்கலாம் என்பதாக கருதப்படுகின்றது. சுகாதார அமைச்சின் வைத்தியர் திலக் ஜயவர்தன 2017 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அவசர விபத்துக்கள் தொடர்பான மதிப்பீட்டறிக்கைக்கு அமைய இலங்கையில் இடம்பெற்றிருக்கும் விபத்துக்களில் அதிகமானவை விலங்குகள் கடித்தல் ஊடாக இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டிருகின்றது. அது இலங்கையில் இடம்பெற்ற மொத்த விபத்துக்களில் 33.1 வீதமாகும். ஆனால், அந்த ஆண்டில் விலங்கு கடியினால் ஏற்பட்ட விபத்துக்களின் வீதத்திலும் பார்க்க குறைந்த அளவிலேயே வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன. குறித்த ஆண்டின் வீதி விபத்துக்களின் வீதம் 15.9 ஆகும். நாய்க்கடி காரணமாக ஆண்டொன்றுக்கு சிகிச்சை பெறுவோரின் தொகை 300,000 ஆகும். நீர்வெறுப்பு நோய்க்காக இலங்கையில் செலவிடப்படும் தொகை 592 மில்லியன் ரூபாவாகும்.
விவசாயமும் வன விலங்குகளும்
கட்டாக்காலி நாய்கள் மாத்திர மன்றி, விவசாயத்துக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், மரஅணில்கள், பன்றிகள், முள்ளம்பன்றிகள், மயில்கள் போன்ற விலங்குகள் தொடர்பாகவும் கடுமையான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும். அரசாங்கத்தின் மதிப்பீடுகளுக்கு அமைய வனவிலங்குகள் சேதப்படுத்தப்படுகின்ற விவசாய உற்பத்திகளின் தொகை மொத்த விவசாய உற்பத்தியில் 30 வீதமாகும். அதன் பெறுமதி அண்ணளவாக 350 பில்லியன்கள் என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது. அதாவது 350,000 மில்லியன் ரூபாவிற்கு சமமானதாக காணப்படுகின்றது.
வன விலங்குகளால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகளானது விவசாயிகள் விவசாயங்களில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தினை இல்லாமலாக்குவதற்கு காரணமாக அமைகின்றன என்பதுடன், அவர்களால் ஈட்டப்படக் கூடிய வருமானத்தின் அளவு பாரியளவில் குறைவதற்கும் காரணமாக அமைகின்றது. வனவிலங்குகள் மூலமாக விவசாயத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக கிராமிய பகுதி மக்களின் விவசாய வருமானங்களில் பாரிய அதிகரிப்பினை ஏற்படுத்த முடியும் என்பதன் மூலம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் காணப்படுகின்ற பொடுபோக்கான தன்மை அகன்று விவசாயத்தில் ஈடுபடுவதற்கான ஆர்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமையும்.
வீட்டுத் தோட்டச் செய்கையில் கட்டுப்படுத்த முடியாத பாரிய அழிவுகளை குரங்குகள் ஏற்படுத்துகின்றன. வீட்டுத் தோட்டங்களின் தென்னை மற்றும் பழச் செய்கைகளுக்கு அவை மூலமாக பாரிய கேடுகள் விளைவிக்கப்படுகின்றன. குரங்குகளின் தொகையில் 80 வீதமான அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியுமாயின் அது வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையில் பாரியதொரு அபிவிருத்தி ஏற்படுவதற்கு காரணமாக அமையும் என்பதுடன், வீட்டுச் செய்கையின் ஊடாக பெறப்படுகின்ற வருமானத்தின் அளவு இருமடங்காக அதிகரிப்பதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தும். பன்றிகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் என்பவற்றை வேட்டையாடுவதற்கான அனுமதியினையும் அவற்றின் இறைச்சிகளைத் தன்வசம் வைத்திருப்பதற்கும் அவற்றை விற்பனை செய்வதற்குமான அனுமதி விவசாயிகளுக்கு வழங்கப்படுவதானது வனவிலங்குகளில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு காரணமாக அமையும். வனாந்தரப் பகுதிகளில் வேட்டையாடல் நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களுக்கு கிராமப் பகுதிகளிலும் வேட்டையாடுவதற்கான அனுமதி வழங்கப்படுவதன் ஊடாக அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக அமைவதற்கு காரணமாக அமையும்.
பால் மற்றும் இறைச்சி
இலங்கை பால் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் செலவழிக்கின்ற தொகை 400 மில்லியன் டொலர்களாகும். ஆனாலும் இலங்கைக்கு தேவையான பால் உற்பத்தியினை இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ளும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதன் ஊடாக பால் உற்பத்திக்காக செலவிடும் தொகையினை மீதப்படுத்திக்கொள்ளலாம். இலங்கையில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு தடையாக இருப்பது போதிய அளவு புற்தரைகள் இல்லாமலிருப்பதல்ல. மாறாக கலாசார மற்றும் மதம் தொடர்பான கொள்கைகளே இதற்கு தடையாக காணப்படுகின்றன. பால் உற்பத்திக்காக மாத்திரம் பண்ணைகளை நடத்திச் செல்வது சாத்தியமானதொரு விடயமல்ல. பால் உற்பத்திக்கு மேலதிகமாக இறைச்சி உற்பத்தியையும் நோக்காகக் கொண்டு மாடுகள் வளர்க்கப்படல் ஊடாக மாத்திரமே பொருளாதார ரீதியில் சாதகமான பிரதிபலன்களை ஏற்படுத்த முடியும். எனினும் இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவது பாவகாரியமாக இலங்கையில் நோக்கப்படுகின்றது.
பௌத்த நாடுகளில் தனி நபர் இறைச்சி நுகர்வின் அளவு இலங்கையை விட அதிகமாகக் காணப்படு கின்றது. திபெத், மொங்கோலியா போன்ற நாடுகளில் பௌத்தர்கள் மாத்திரமன்றி பிக்குகள் கூட இறைச்சியை உண்ணுபவர்களாக இருக்கின்றனர். தென் ஆசிய நாடுகளில் இறைச்சி நுகர்வு கூடிய நாடாக பூட்டான் காணப்படுகின்றது.
விவசாயப் புரட்சி ஒன்றின் அவசியம்
ஓரிடத்தில் தேங்கிய அமைப்பில் இருக்கின்ற சாதாரண விவசாயிகள் வசமிருக்கின்ற கிராமிய விவசாயங்களுக்கும் பாரிய கம்பனிகள் வசமிருக்கின்ற வாணிப விவசாயங்களுக்கும் புரட்சிகரமான மாற்றம் ஒன்றின் தேவை காணப்படுகின்றது எனலாம். இந்த இரண்டு துறைகளிலும் பாரிய வருமானம் ஒன்றினை ஈட்டிக்கொள்ளும் அமைப்பிலான மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதானது இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட காரணமாக அமையும்.
கிராமிய விவசாயத்துறையினை அபிவிருத்தி செய்வதற்காக அந்த துறைக்காக வன விலங்குகளால் ஏற்படுத்தப்படுகின்ற கேடுகளிலிருந்து அந்த துறை பாதுகாத்துக்கொடுக்கப்படல் வேண்டும். அத்துடன் முயற்சிக்கு ஏற்ற அடிப்படையிலான வருமானங்களை ஈட்டிக்கொள்ளும் அடிப்படையிலான பயிர்ச்செய்கைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படவேண்டும். நெல் உற்பத்திக்காக வழங்கப்பட்டிருக்கின்ற முன்னுரிமை இல்லாமலாக்கப்படவேண்டும்.
நெல் பயிர்ச்செய்கை மூலமாக ஈட்ட முடியுமான வருமானம் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது. அதிஷ்டமிருக்குமாயின் ஒரு ஏக்கர் வயல் நிலமொன்றிலிருந்து ரூ.40,000 வருமானமாக பெற்றுக்கொள்ளலாம். இலங்கையின் காணிகளில் பாரியளவு (933,000 ஹெக்டெயர்கள்) நெல் பயிர்ச்செய்கைக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஈர வலயத்தில் அதிக வயல் காணிகளில் நெல் பயிரிடப்படுவதில்லை. அந்தக் காணிகளில் வேறு எந்தவிதமான பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளப்படுவதுமில்லை. நெல் பயிர்ச்செய்கைக்காக 19 நாட்களுக்கு மாத்திரமே மனித உழைப்பு தேவைப்படுகின்றது. மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலத்தில் 19 நாட்கள் மாத்திரமே வேலையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு எவ்வாறு செல்வந்தர்களாக மாற முடியும்? அடுத்து மூன்று வேளைகளுக்கும் சோறு உண்ணுவதைப் பழக்கப்படுத்திக்கொண்ட மக்களால் எவ்வாறு ஆரோக்கியமானவர்களாக வாழமுடியும்? இலங்கையில் சோறு உண்ணும் அளவினைக் குறைத்து இறைச்சி, மரக்கறி, பழவகைகளை அதிகமாக உட்கொள்கின்ற அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். அதன் ஊடாக காணிகளை பிரயோசனப்படுத்திக் கொள்ளும் முறைகளிலும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்கின்ற முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி விவசாயத்தின் ஊடாக ஈட்டிக்கொள்கின்ற வருமானத்திலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.
அப்போது நாட்டுக்கு தேவையான அரிசி உற்பத்தியினை உலர் வலயத்திலேயே உற்பத்தி செய்துகொள்ள முடியுமான நிலை ஏற்படும். எனவே, ஈர வலயத்தில் நெல் உற்பத்திக்கு பயன்படுத்தாத இடங்களை அதனது சரிவான அமைப்பில் மாற்றம் ஏற்படாத அடிப்படையில் வேறு பயிர்ச் செய்கைகளுக்காக அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும். அந்த வயல் நிலங்களில் இறால் பண்ணைகளை அமைக்கலாம். இறால் உணவை நாங்கள் உட்கொள்ளாவிடின் அதனை ஏற்றுமதிக்காக பயன்படுத்தலாம். மேலும் அந்த வயல் நிலங்களை வெளிநாடுகளுக்காக வாத்துக்களை உற்பத்தி செய்யும் பண்ணைகளாக மாற்றியமைக்கலாம்.
வாகனங்களுக்காக பயன்படுத்தும் எரிபொருளுடன் அல்கஹோல் 15 வீதத்தினை கலந்து பயன்படுத்தலாம் என்பதை இலங்கை கவனத்தில்கொள்ள வேண்டும். பிரேஸில், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகள் இவ்வாறாக கலந்து உற்பத்திசெய்யப்பட்ட எரிபொருளினைப் பயன்படுத் துகின்றன. இலங்கை வருடாந்தம் 5,000 மில்லியன் டொலருக்கு கிட்டிய தொகையினை எரிபொருளுக்காக செலவிடுகின்றது. இலங்கையில் கசிப்பு உற்பத்தி செய்கின்றவர்கள் ஊடாக எரிபொருளுடன் கலப்பதற்கு தேவையான சுத்தமான கசிப்பினை உற்பத்தி செய்துகொள்ள முடியுமாயின் 750 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இலங்கையில் மீதப்படுத்தலாம். இதனை கிராமிய மக்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறை ஒன்றாக மாற்றியமைக்கலாம். இவை இலங்கையின் வருமானத்தினை அதிகரிப்பதற்கான புரட்சிகரமான மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கான யோசனைகளாகும்.
- விக்டர் ஐவன்
- தமிழில் ராஃபி சரிப்தீன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM