2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி அதிகாலை, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது, வெற்றிமுகம் காட்டிக் கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேனவை விட, அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவின் மீதே எல்லோரது கவனமும், குவிந்திருந்தது.
அதிகாலைப் பொழுதில் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டு மஹிந்த ராஜபக் ஷ அலரி மாளிகையை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் ஹெலிகொப்டரில் தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்துக்குச் சென்றார்.
அவர் தோல்வியை ஒப்புக்கொண்டு, அலரி மாளிகையை விட்டு வெளியேறி, தங்காலைக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போதும், அவரைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஊடகங்களின் கவனம், அவர் மீதே குவிந்திருந்தது.
ஆனால், 2019 நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன எப்படி வெளியேறினார் என்பது பற்றியோ அவரது எதிர்காலம் பற்றியோ யாரும் கண்டுகொள்ளவேயில்லை.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவானதில் இருந்து ஓரிரண்டு ஆண்டுகள் கொண்டாடப்படுகின்ற ஒரு தலைவராக- மக்களின் தலைவராகவே அடையாளப்படுத்தப்பட்டார். ஊடகங்களும் அவரை மெச்சிக் கொண்டிருந்தன. ஆனால் அவர் விலகிச் சென்றபோது யாரும் வருந்தம் கொள்ளவில்லை.
மஹிந்த ராஜபக் ஷ தோற்கடிக்க முடியாத ஒரு சக்தியாக கருதப்பட்டவர். அவரது தோல்வி எதிர்பார்க்கப்படாத ஒன்றாக இருந்ததால், தோல்வியடைந்த பின்னரும், அவரைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் இருந்தது.
மைத்திரிபால சிறிசேன எதிர்பார்க்கப்படாத வெற்றியினால் மட்டும் மின்னியவர். அதிகாரம் அவரை விட்டுப் போன பின்னர், அவர் யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒருவராக மாறி விட்டார்.
தொடர்ந்தும் அதிகாரத்தை தக்கவைக்க முயன்ற அவர், அது நடக்காது என்று தெரிந்த பின்னர், இரண்டாவது முறையும் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
ஆட்சியின் இறுதிக்கட்டத்திலேயே அவர், தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
அதையடுத்து, அவர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் நுழைய முயற்சிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. அவர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு நுழைவதற்கு யாரும் இடம் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை.
அவ்வாறு விட்டுக் கொடுத்தாலும், 2015இல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொடுத்த தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பட்டியலில் அவரது பெயர் இல்லாத போது, அவரால் பாராளுமன்ற உறுப்பினராக முடியுமா என்ற கேள்விகளும் இருந்தன.
இவ்வாறான நிலையில் அண்மையில் மைத்திரிபால சிறிசேன, தான் மீண்டும் எழுவேன் என்றும் அரசியலுக்குத் திரும்புவேன் என்றும் அறிவித்திருக்கிறார். அவரது அந்த அறிவிப்பு ஊடகங்களிலோ மக்கள் மத்தியிலோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை.
அடுத்த ஆண்டு நடக்கப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் பொலன்நறுவை மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்று, சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர கூறியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ தோல்வியடைந்த போது அவருக்குப் பின்னால், அவரது ஆதரவாளர்களும், அவரைக் கொண்டாடும் மக்களும் அணிதிரண்டனர். அவரை மீண்டும் அரியணையில் ஏற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டனர்.
ஆனால், மைத்திரிபால சிறிசேன பதவியை விட்டு நீங்கிய போது, யாருமே அதற்காக கவலைப்படவில்லை. அவருக்காக ஏங்குவதற்கு யாரும் இருக்கவில்லை. அவரது கட்சியினர் கூட இப்போது அவரைக் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.
அரசியலில் இரண்டாவது இன்னிங்ஸ் என்பது எல்லோருக்கும் வாய்த்து விடாத ஒன்று. மஹிந்த ராஜபக் ஷ தோல்வியைச் சந்தித்து விட்டு மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்குள் வர முயன்ற போதும் பலர் அவரை எள்ளி நகையாடினர். மீண்டும் மீண்டும் அவமானப்படப் போகிறார் என்றே கூறினர்.
ஆனால், அரசியலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் இன்னும் அமோகமானதாகவே ஆரம்பித்திருக்கிறது, அதுபோல, மைத்திரிபால சிறிசேனவும், இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆடுவார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த தகைமையே, மஹிந்த ராஜபக் ஷவின் தலைமுறைகளின் அரசியல் செழிப்புக்குப் போதுமானது,
ஆனால் மைத்திரிபால சிறிசேன அவ்வாறு எதனைச் சாதித்து விட்டு அரசியலில் மீள் பிரவேசத்துக்குத் தயாராகிறார் என்ற கேள்வி இருக்கிறது.
அவர் ஆட்சிக்கு வரும்போது பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றாமல் அல்லது, அந்த வாக்குறுதிகளுக்கு பாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விட்டே வெளியேறினார்.
இப்போது கூட கோத்தாபய ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுப்பது குறித்து பேசியிருக்கிறார்.
அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை, 19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழித்து விடும் என்று தெரிந்திருந்தும், மைத்திரிபால சிறிசேன இவ்வாறான அழைப்பை விடுத்திருக்கிறார்.
2018 ஒக்டோபர் ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் அவர் கிட்டத்தட்ட எல்லா நிலைமைகளையும் குழப்பி விட்டே சென்றிருக்கிறார். அதற்குப் பின்னர் அவர் அரசியலிலோ, ஆட்சியிலோ எதையும் சாதிக்கக் கூடியவராகவும் இருக்கவில்லை.
2015இல் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், மக்களின் ஆணைக்கு உரிய மதிப்பைப் கொடுத்து, செயற்பட்டிருந்தால், இன்று அவருக்கு ஏற்பட்ட நிலையும் ஏற்பட்டிருக்காது. அவரை தலையில் வைத்து மக்கள் கொண்டாடும் நிலையே இருந்திருக்கும்.
அவரை பதவியை விட்டுப் போகக் கூடாது என்று அழுதிருப்பார்கள். அவரது மீள் வருகைக்காக ஏங்கியிருப்பார்கள்.
இப்போதும் கூட, மைத்திரிபால சிறிசேன மீள் அரசியல் பிரவேசம் செய்வது சுலபமானதாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் அவரது தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நினைத்தவாறு தலையெடுக்க முடியாது.
பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற அழுங்குப் பிடியில் அந்தக் கட்சியினர் தீவிரம் காட்டுகிறார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் இனி காப்பாற்றுவார்களா என்பது தெரியாது.
நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவதை பொதுஜன பெரமுனவினர் விரும்பவில்லை. அதிகாரம் அவர்களின் கையில் இருக்கும் போது அவர்கள் வைத்தது தான் சட்டம். மைத்திரியின் கையில் அதிகாரம் இருந்த போது, அவர் நாற்காலி தான் சின்னம் என்று அடம்பிடித்து இணங்க வைத்தார்.
ஆனால் இப்போது. அதிகாரம் ராஜபக் ஷவினரிடம் இருக்கிறது. அவர்கள் சொல்வது தான் சட்டம்.
அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் சொல்லுக்கும் கீழ்ப்படியும் ஒருவராகவே மைத்திரிபால சிறிசேன இரண்டாவது இன்னிங்ஸ் அரசியலை தொடரப் போகிறாரா என்ற கேள்வி இருக்கிறது.
மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்துக்கு மீண்டும் நுழைவதன் மூலம், அமைச்சர் பதவியைப் பெறலாம். அது ராஜபக் ஷவினரின் அரசியல் அதிகாரங்களுக்குட்பட்ட ஒரு பதவியாகத் தான் இருக்கும். அவ்வாறான ஒரு அரசியலைத் தான் தொடருவதற்குத் தான் மைத்திரிபால சிறிசேன விரும்புகிறாரா ? என்ற கேள்வி எழுகிறது.
மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ஆளுமை அரசியலை வெளிப்படுத்தியவரல்ல. அவர் உச்ச அதிகாரத்தில் இருந்த போதும். அதனைக் குழப்பியடித்து கோமாளித்தனம் பண்ணியவர்.
எப்போதும், அதிகாரத்துக்கு கீழ்ப்படிந்து பழக்கப்பட்டவர். அவரால், ராஜபக் ஷவினரின் அரசில் ஒரு அமைச்சராக இருப்பதில் சங்கடம் இருக்காது.
ஆனால் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர், பாராளுமன்ற அரசியலுக்கு மீண்டும் வந்து, அலைக்கழிவது அழகான விடயமல்ல.
மஹிந்த ராஜபக் ஷவும் இதே விமர்சனங்களைத் தான் எதிர்கொண்டார். ஆனால் அவர், தனக்கிருந்த ஒரு ஆளுமை மற்றும் ஆதரவு வட்டத்தினால், அந்த விமர்சனங்களை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
அவரைப் போல மைத்திரிபால சிறிசேனவினால் எழுச்சி பெற்று விட முடியாது, ஏனென்றால், எல்லோரும் மஹிந்த ராஜபக் ஷ அல்ல, அவ்வாறு ஆகி விடவும் முடியாது.
- சத்ரியன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM