முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கும் கூட்டு அணியுடன் கைகோர்த்துப் பயணிக்க தமிழ்த் தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்து பிரிந்த உறுப்பினர்கள் இன்றையதினம் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி எனும் புதிய கட்சியினை ஆரம்பித்துள்ளனர்.

கட்சியின் ஆரம்ப நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

கட்சியின் தலைவராக என்.சிறிகாந்தா, செயலாளர் நாயகமாக எம்.கே.சிவாஜிலிங்கம், உப தலைவராக சட்டத்தரணி சிவகுருநாதன் மற்றும் தேசிய அமைப்பாளராக சில்வஸ்டர் விமல்ராஜ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.