மானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.'

மானிப்பாய் மற்றும் கட்டுடையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய், சுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்ற போது, பொலிஸாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் கைவிட்டுத் தப்பி சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் மானிப்பாய், சுதுமலை வடக்கில் கடந்த 12ஆம் திகதி பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தி அட்டூழியத்தில் தப்பித்தது.

அந்த வீட்டிலிருந்து புறப்பட்டு சிறிது தூரத்தில் மானிப்பாய் பொலிஸார் இருவரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் வீதியில் கைவிட்டு கும்பல் தப்பிச் சென்றது.

வன்முறைக் கும்பலின் மோட்டார் சைக்கிள்களை மீட்ட பொலிஸார், மோட்டார் சைக்கிள் ஒன்றின் உரிமையாளரான நவாலியைச் சேர்ந்தவரை அன்றைய தினம் மாலை கைது செய்தனர். எனினும் தனது மோட்டார் சைக்கிளை கும்பல் பறித்துச் சென்றது என்று அந்த நபர் தெரிவித்திருந்தார்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர் கைது செய்யப்பட்டதும் அன்றைய தினம் (12) இரவு அவருடைய வீட்டுக்குள் புகுந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டுத் தப்பித்திருந்தது.

இரண்டு வன்முறைகளையும் ஒரே கும்பலைச் சேர்ந்தோரே செய்தனர் என்று விசாரணைகளில் பின்னர் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அந்தக் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கட்டுடையைச் சேர்ந்த ஒருவரும் மானிப்பாயைச் சேர்ந்த ஒருவருமெ இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்கப்படும் நிலையில் மேலும் நால்வரைத் தேடி பொலிஸார் விசாரரணகளை முன்னெடுத்துள்ளனர்.