எதிரே வரவிருக்கும் பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்று கடந்த கால அரசியலை விட பலம் பொருந்திய ஒரு கட்சியாக விளங்குமென கூட்டமைப்பின் ஒரு சாராரும் இல்லை. கடந்த காலத்தைவிட இம்முறைத்தேர்தலில் அதிக நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வருமென கூட்டமைப்பின் மறுசாராரும் பந்தயம் கட்டும் நிலையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் சூன்யமாகியுள்ளது என்ற அபிப்பிராயமும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் சலசலப்பான ஒரு நிலை உருவாகியுள்ளதாக பேசப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்ற ஒன்றை உருவாக்கியபோது அதற்கு ஒரு பரந்து பட்ட நோக்கம் இருந்ததாக கூறப்பட்டது. ஆயுதப்போர் வியாபித்திருந்த நிலையில் சர்வதேச அளவில் ஓர் பலமான ஆளுமை மிக்க அரசியல் தளம் உருவாக்கப்பட வேண்டுமென்ற எதிர்கால தேவை அவசியம் கருதி அது உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் பொறுப்பும் கூட்டமைப்புக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. இதில் தெரிந்தோ, தெரியாமலோ அல்லது மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு தமிழரசுக் கட்சிக்கு பாரதீனப்படுத்தப்பட்டிருந்தது. யுத்தம் மெளனித்தபின் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலென்ன பொதுத் தேர்தலாக இருந்தாலென்ன. தமிழ் மக்களின் ஆபத்து வாய்ந்தவனாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதப்பட்டது. இதன் காரணமாகவே 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் கூட்டமைப்பு கைநீட்டிக் காட்டியவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யும் கைங்கரியம் கொண்டவர்களாக வட–கிழக்கு மக்கள் காணப்பட்டார்கள்.
துரதிர்ஷ்டவசமாக 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்கள் தீர்மானிக்கும் சக்திகளாக கணப்படாதபோதும் பொதுத் தேர்தலில் கூட்டமைப்புக்கு பலம் பொருந்திய ஆணையை வழங்கியிருந்தார்கள். இந்த தேர்தல் காலத்திலும் அதன் பின்னுள்ள போக்கிலும் கட்சிக்குள் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகளோ அல்லது வீம்புத்தன்மையோ சில தரப்பினர் கூட்டுக்குள் இருந்து வெளியேறிக் கொண்டனர்.
இவ்வெளியேற்றத்துக்கு பல காரணங்களும் நியாயங்களும் கற்பிக்கப்பட்டாலும் சில பிடிவாதங்களும் முரண் நிலைகளும் கட்சியின் பலத்தை பலவீனப்படுத்த வைக்கப்பட்ட ஆப்பாக ஆகிவிட்டது என பலரை கவலையடைய வைத்தது.
இந்த தேர்தலைத் தொடர்ந்து கூட்டமைப்பு பதியப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை குறித்தவொரு தரப்பினர் முன்வைத்தாலும் கூட்டமைப்புக்கு நெருக்கடி நிலையொன்றை மேற்படி கோரிக்கை உருவாக்கியது என்பது உண்மையே. ஆனால் இக்கோரிக்கையை நிறைவேற்றும் தோரணை காணப்படவில்லையென்ற கருத்தே மலிந்து காணப்பட்டது.
மட்டக்களப்பு, ஊறணியில் நடைபெற்ற 14ஆவது மாநாட்டில் பின்வரும் வகையிலான கருத்தொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் இருந்த அன்றைய காலச் சூழலுக்கு இசைவாக வரலாறு எமது கட்சிக்கு ஒரு புதிய அரசியல் பாத்திரத்தையும் தந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளை தலைமையேற்று நடத்தும் பாத்திரமே அது. அந்த புதிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக இலங்கை தமிழரசுக் கட்சியே இன்றுவரை இருந்து வருகிறது. அவ்வாறே அது என்றும் இயங்கிவரும் இலங்கை தமிழரசுக் கட்சியான எமக்குத்தான் அதிகூடிய ராஜ்ஜிய அதிகாரமும் அனைத்துலக சமூ
கத்தால் வழங்கப்படுகிறது. இந்த ராஜ்ஜிய அங்கீகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்புடையதாகவும் உரித்துடையதாகவும் கூட பரிணமித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் கூட்டமைப்பை ஒரு தேர்தல் கட்சியாக அங்கீகரிப்பது இப்போதைய சூழலில் அவசியமற்றது என்ற கருத்து திரைமறைவில் பேசப்பட்ட விடயங்களாக இருந்தது. பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் பற்றி கோரிக்கையாளர்களாலும் அவசியமற்றது என்பது பற்றி மெளனமான வாசிப்பாகவும் இருந்தது. இருந்த போதிலும் 2011ஆம் ஆண்டு காலப்பகுதிவரை கூட்டமைப்பின் சமநிலை செயலாளர்களாக பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இருந்துள்ளனர்.
எதிர்வரும் 2020 ஏப்ரல் மாதமளவில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களை விட வட–கிழக்கில் அதிக ஆசனங்களைப் பெற்று தனது பலத்தை நிரூபிப்பது மாத்திரமன்றி மக்களின் காத்திரமான ஆணையையும் பெறும் என்ற தனது எதிர்பார்ப்பையும் தீர்க்கதரிசனமான நம்பிக்கையையும் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றபோதும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அவ்வாறில்லை எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பினராகிய நாம் அதிகூடிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும் என்ற யதார்த்தத்தையும் எடுத்துரைத்துள்ளனர்.
இவையிரண்டும் முரண்பட்ட கருத்தா அல்லது நேரொத்த கருத்தா என்பதை இன்றைய நிலையில் எந்த அளவுகோல் கொண்டும் தீர்மானிக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க கடந்த கால உண்மைகளிலிருந்து பெறப்படும் அனுமானங்களைக் கொண்டு புரிந்து கொள்வது இலகுவாக இருக்கலாம். அன்றைய இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து இன்றைய கூட்டமைப்பு வரை தமிழ் மக்களின் ஆணை என்பது மூன்றுவகை காலகட்டங்களைக் கொண்டது.
ஆரம்ப காலத்தை சமஷ்டி கட்சி அல்லது இலங்கை தமிழரசுக்கட்சியென்றும் 1977 முதல் தமிழர் விடுதலை கூட்டணியென்றும் 2002 ஆம் ஆண்டுக்குப் பின் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் மூன்று பரிணாமங்களைக் கொண்டதாக இருந்து வந்துள்ளது.
ஒவ்வொரு காலப் பிறப்பிலும் செல்வாக்குப் பெற்ற காரணிகள் வெவ்வேறாக இருந்ததும் சூழ்நிலைகளும் அரசியல் பண்புகளும் மாறுபட்டதாக காணப்பட்ட காரணத்தினால் பாராளுமன்ற ஆசனங்களும் மாறுநிலை அடைந்துள்ளன.
பெற்ற ஆசனங்கள்
ஆண்டு ஆசனங்கள்
1952 02
1956 10
1960 15
1965 14
1970 13
த.வி. கூட்டணி
1977 18
1989 த.வி.கூ. 10
ஈரோஸ் 12 = 22
1994 த.வி.கூ. 05
2000 த.வி.கூ. 05
ரெலோ 03
அ.இ.த.கா. 01
2001 கூ.வி.கூ. 15
2004 த.தே.கூ. 22
2010 த.தே.கூ. 14
2015 த.தே.கூ. 16
மேலே எடுத்துக்காட்டிய தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்பித்து முதல் முதல் 1952ஆம் ஆண்டு தேர்தலில் நின்றபோது 2 ஆசனங்களைப் பெற்றுக் கெண்ட நிலையில் 1976 மே 14ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியென்ற கட்சி நாமத்தின் கீழ் வட கிழக்கில் 18 ஆசனங்களைப் பெற்றிருந்தது.
1978 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் விருப்பு வாக்கு அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் 1989 கூட்டணி 10 ஆசனங்களையும், யாழ்ப்பாணத்தில் 9, வன்னி 1, திருகோணமலை 2 உட்பட ஈரோஸ் கூட்டு 12 ஆசனங்களையும் பெற்ற நிலையில் மொத்தமாக கூட்டணி ஈரோஸ் அமைப்பு 22 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றிருந்தது.
கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட வேளை விடுதலைப் புலிகளின் பலத்த அனுசரணை காரணமாக மீண்டும் 22 ஆசனங்கள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்துமே வரலாற்றுத் தரவுகள்.
இப்போது கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர்களான சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் கருத்துப்பற்றி சிறிது நோக்குவது பொருத்தமானதாக இருக்கும்.
கடினமான நெருக்கடிகளை கூட்டமைப்பு சந்திக்க வேண்டிய ஒருகாலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்ற கருத்து அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்தாக காணப்படுகிறது. அவர்களின் ஆதங்கத்தின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட–கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற கட்சியாகும். அவ்வகையில் வட–கிழக்கே வெற்றியைத் தீர்மானிக்கும் களம் என்பது யாவரும் அறிந்தது.
இதேவேளை வடக்கின் அரசியல் கள நிலைகளுடன் கிழக்கின் போக்குகளை ஒப்பிட்டு பெரியளவில் சமதன்மை காண முடியாது. குறிப்பாக 2015ஆம் ஆண்டுக்குப் பின்னுள்ள அரசியல் கலாசாரமும், காரணிகளும் மாறுபட்ட நிலையில் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன என்ற யதார்த்தத்தை யாரும் மறுத்துரைக்க முடியாது.
முதலில் வடக்கு திசையின் மீது பார்வையைச் செலுத்துவோமானால் வடக்கில் இன்றைய அரசியல் களத்தில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்த தொடங்கிவிட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுக் கட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, முன்னாள் வடக்கு மாகாண முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி (2018) முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் (2018) ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம். இதே போன்றே வட–கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் ஒரு கட்சியை உருவாக்கியுள்ளார்.
ஏலவே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தலைவராகக் கொண்ட, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற கட்சிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் போட்டிக் கட்சிகளாக தலைநிமிர்த்திக் கொண்டு நிற்கின்றன. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றில் பிரதிநிதித்துவம் வகித்துக் கொண்டிருக்கும் விஜயகலா மகேஸ்வரன், சுதந்திரக் கட்சி ஆதரவாளரான இராமநாதன் அங்கஜன் போன்றவர்களின் செல்வாக்கையும் குறைத்து மதிப்பிட முடியாது.
இது தவிர டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் ஒரு ஆசனத்தை கொண்டுள்ளது. இவ்வாறான சிக்கலும் நெருக்கடிகளும் சவாலும் நிறைந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கு எத்தகைய பயில்வான்களுடன் மோத வேண்டியுள்ளது என்பதை கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.
ஏலவே வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் சக்திக்கு உள்ள வெறுப்பு அதிருப்தியென்பது வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இருந்தபோதிலும் ஆளுமையுள்ள ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கெட்டித்தனமென்பது பிழைகளையும் தவறுகளையும் நிவர்த்தி செய்து வருகின்றது என்று கூறலாம். வன்னி நிலைமைகள் இன்னுமொரு போக்கு கொண்டதாக காணப்படுகிறது. இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யும் பரிகாரத்தில்தான் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் ஈடேறிக் கொள்ள முடியும்.
வட–கிழக்கு 29 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட மாகாணங்களாகும். அதில் யாழ். 07, வன்னி 06, மட்டக்களப்பு 05, அம்பாறை 07, திருகோணமலை 04 இதில் யாழ். தேர்தல் தொகுதி 2018ஆம் ஆண்டு கணக்கின்படி 5,29,239 வாக்காளர்களும் வன்னித் தேர்தல் மாவட்டம் 2,53,058 வாக்காளர்களையும் கொண்டது. சில சமயங்களில் 2019ஆம் ஆண்டு புள்ளி விபரங்கள் சிறிய மாற்றங்களைக் கொண்டதாக இருக்கலாம். இதில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் 7 உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட முடியும் என்பதை கணக்கில் வைத்துக் கொண்டு வாய்ப்பாட்டின் வழி கணித்துக் கொள்ள வேண்டியது அனுபவத்தையும் அறிவையும் அடிப்படையாகக் கொண்டது. இதுபோலவே வன்னி மாவட்டத்தின் தேர்தல் தொகுதியும் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணம் மூவின மக்களும் சம அளவில் வாழும் மூன்று தேர்தல் தொகுதிகளைக் கொண்டது. அவை முறையே திருகோணமலை (4), மட்டக்களப்பு (5), அம்பாறை (7) என்பனவாகும். மூன்று தேர்தல் தொகுதிகளிலிருந்தும் மொத்தமாக 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவேண்டும். வடக்கு மாகாணத்தைப்போன்று புதிய கட்சிகளின் தோற்றம் இடம்பெறாதபோதும் சிவில் அமைப்புக்கள் சமூக அமைப்புக்கள் அரசியல் புத்திஜீவிகளின் செல்வாக்குக்கு உட்பட்ட மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்படுகிறது.
இங்குள்ள நிலைமைகளில் பிரதேச கட்சிகள் தேசியக் கட்சிகள் ஆகியவற்றின் போட்டித் தன்மை வலுப்பெற்ற பிரதேசமாகும். தமிழ் மக்களின் வாக்கு வங்கிகளை பங்கு போடுவதற்கு பிரதேச கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் அதேவேளை தேசியக் கட்சிகளும் ஊடுருவல் செய்வதன் காரணமாக தமிழ் வாக்காளரின் வாக்களிப்பு பிரிந்து செல்லும் தன்மை கொண்டது.
குறிப்பாக, திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கூடியளவு ஆதரிக்கின்றபோதும் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு நல்கும் நிலைமைகளும் காணப்படுகின்றன. இதன் காரணமாக ஒருசில தேர்தல் காலத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமற்போன நிலைமைகளையும் மறந்துவிட முடியாது.
உதாரணமாக 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது ஐக்கிய முன்னணி திருகோணமலை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்ட ஒரு காரணத்தினால் தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாமற்போனது. இலங்கையின் முதலாவது தேர்தல் தொடக்கம் 11ஆவது தேர்தல் வரை 53 வருட வரலாற்றில் தமிழ்க் கட்சிகள் தமது பிரதிநிதித்துவத்தை மாவட்டத்தில் பெறமுடியாமற்போன தேர்தலாக 2000ஆம் ஆண்டு தேர்தல் இருந்துள்ளது.
இத்தேர்தலில் கூட்டணி பெற்ற 10.58 வீத வாக்குடன் ஈ.பி.டி.பி. 3.40, வீத வாக்கையும் அகில இ.தமிழ் காங்கிரஸ் 2.82 வீத வாக்கையும் ரெலோ கட்சி பெற்ற வாக்கு உட்பட சேர்த்துப் பார்த்தால்கூட பிரதிநிதித்துவத்தைப் பெறமுடியாத அளவுக்கு வாக்களிப்பு பெரும் வீழ்ச்சி கண்ட தேர்தலாக 2000ஆம் ஆண்டு தேர்தல் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்கள் சட்டத்தரணி கா.சிவபாலன், சே.ஸ்ரீஸ்கந்தராஜா, செ.பத்மநாதன் (ஈழத்து நாதன்), ஒ.வர்ணகுலநாதன், ரி.இராமமூர்த்தி, சாகுல் ஹமீட், அ.பரசுராமன் ஆகியோர் நிறுத்தப்பட்டிரு
ந்தார்கள்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கு கணிசமாக இடம்பெற்ற ஒரு மாகாணம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என்பவற்றுக்கு கணிசமான வாக்கு வங்கிகள் இருந்து வருகிறபோதும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் பாரம்பரிய ஆதரவாளர்கள் உள்ள ஒரு மாகாணமாகவும் கிழக்கு மாகாணம் காணப்படுகிறது.
இவற்றுடன் இன்றைய நிலையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதுள்ள அதிருப்திகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களின் விரக்தியை சாதகமாக பயன்படுத்தும் நிலை காரணமாக, சில சமூக அமைப்புக்கள் பிரதேச அமைப்புக்கள் பின்னணி வகிக்கும் சில மாற்றுக்கட்சிகளின் வளர்ச்சி காரணமாக போட்டி நிலைமைகள் வலுத்துக் கொண்டு வருகின்றது என்ற கசப்பான உண்மையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் சூன்யமாகி வருகிறது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிற நிலையில் இதை மீளாய்வு செய்துபார்க்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒரு விடயமே. காரணம் மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்திகளும் விரக்திகளும் இக்கருத்தை உண்மையாக்கலாம்.
இவற்றுடன் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம், வேலைவாய்ப்பு இன்மை, கிராமங்கள் அபிவிருத்திப் பார்வையில் அகப்படாமை, பொது மக்களின் சில கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டமை போன்றவற்றுக்கு அப்பால் நல்லாட்சி அரசாங்கத்தால் கூட்டமைப்பு ஏமாற்றப்பட்டமை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் நடவடிக்கையில் கூட்டமைப்பு நடந்து கொண்டமை போன்ற இன்னோரன்ன காரணிகள் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு மீதான நம்பிக்கைகளையும் விசுவாசத்தையும் குறைத்துக் கொண்டு விட்டதாகவே மக்களின் அபிப்பிராயங்கள் விரவியுள்ள நிலையில் இத்தகைய விமர்சனங்களும் கண்டனங்களும் இடம்பெறுவது வழமையே.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு மிகச் சிறந்த யுக்திகளையும் மதிநுட்பங்களையும் பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்பது சாதாரண ஒரு குடிமகனும் புரிந்து கொள்ளக் கூடிய விடயம். எது எவ்வாறு இருந்த போதிலும் பொதுத் தேர்தலை மிகச் சிறந்த முறையில் கையாளத் தவறும் பட்சத்தில் இரண்டு தசாப்த காலத்துக்கு மேல் தமிழ் மக்களும் அதன் தலைமைகளும் பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். இவற்றை வெற்றிகொள்ள வேண்டுமாயின் அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றுபட வேண்டிய மார்க்கமே சிறந்ததாக இருக்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM