(பாகிஸ்தான், ராவல்பிண்டியிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாளான இன்றைய மதிய போசன இடைவேளையின்போது பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் போது, அபிட் அலி 31 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் அஸார் அலி 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். ஆரம்ப வீரராக களமிறங்கிய ஷான் மசூத் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்திருந்தார்.  இவர் கசுன் ரஜித்தவின் பந்துவீச்சில் தினேஷ் சந்திமாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

 கசுன் ரஜித்த 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை அணி, தனஞ்சய டி சில்வா சதம் குவித்த சொற்ப நேரத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

தனஞ்சய டி சில்வா மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 166 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார். டில்ருவன் பெரேரா ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களைப் பெற்றதுடன் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் தனஞ்சயவுடன் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இவர்களைவிட திமுத் கருணாரட்ன 59 ஓட்டங்களையும் ஓஷத பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 33 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்தவீச்சில் ஷஹின் ஷா அப்றிடி 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 92 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.