(பாகிஸ்தான், ராவல்பிண்டியிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெறும் வரலாற்று முக்கியம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா அபார சதம் ஒன்றைக் குவித்து பெரும் பராட்டைப் பெற்றார்.

தனஞ்சய டி சில்வா சதம் குவித்த சொற்ப நேரத்தில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது (டிக்ளயார்ட்).

இலங்கை அணியினர் மீது 2009 இல் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் பத்தரை ஆண்டுகள் கடந்து பாகிஸ்தானில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே தனஞ்சய சதம் குவித்தமை விசேட அம்சமாகும்.

தனஞ்சய டி சில்வா 165 பந்துகளில் 15 பவுண்ட்றிகளுடன் தனது சதத்தைப் பூர்த்திசெய்ததுடன், முதலாவது இன்னிங்ஸை இலங்கை டிக்ளயார் செய்தபோது 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அத்துடன் டில்ருவன் பெரேரா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். இவரக்ள் இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இவர்களைவிட திமுத் கருணாரட்ன 59 ஓட்டங்களையும் ஓஷத பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 33 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்தியுஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்தவீச்சில் ஷஹின் ஷா அப்றிடி 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 92 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி தற்போது அதன் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.