(நா.தனுஜா)

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்பறவு ஏற்கனவே வலுவானதாக இருக்கின்றது என்றும், அதனை மேலும் ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மொடெகி தொஷிமித்சுவிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்கு இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மொடெகி தொஷிமித்சு நேற்று அலரிமாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டமைக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பிரதமரிடம் கையளித்தார்.

அக்கடிதத்தில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் பதவியேற்றுக்கொண்டுள்ள நிலையில் விரைவாகவே ஜப்பான் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இடம்பெற்றுள்ளமையானது, இலங்கைக்கு உயிர்ப்புடன் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஜப்பான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக ஷின்சோ அபே சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜப்பானிய பிரதமரின் கடிதத்திற்குத் தனது மகிழ்வை வெளிப்படுத்தும் விதமாகக் கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 2014 இல் ஷின்சோ அபே இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தையும் நினைவுகூர்ந்தார். 

அத்தோடு இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான சுமார் 66 வருடகால இருதரப்பு நல்லுறவு தொடர்பில் குறிப்பிட்டதுடன், 'இருநாடுகளுக்கும் இடையிலான உறவு ஏற்கனவே வலுவானதாக இருக்கின்றது. அதனை மேலும் ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்' என்றும் தெரிவித்தார்.

மேலும் 'திறந்ததும், சுதந்திரமானதுமான இந்து – பசுபிக் பிராந்திம்' என்ற ஜப்பானின் இலக்கின் கீழ், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர நிலையமாக இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதில் தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஜப்பான் கொண்டுள்ள ஆர்வம் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது தெளிவுபடுத்தப்பட்டது.

அதேவேளை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி போன்ற இருநாடுகளும் இணைந்து முன்னெடுத்துவரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் இருதரப்பு சந்திப்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.