சென்னையில் இளம்பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த எழுநூறுக்கும் மேற்பட்ட நீர்க்கட்டிகளை சிக்கலான சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து வைததிய நிபுணர் நந்திதா தெரிவித்ததாவது, 

“சென்னையைச் சேர்ந்த 29 வயது நிரம்பிய இளம்பெண், ஒருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு, வயிறு வீக்கமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நடைபெற்ற வைத்திய பரிசோதனையில், வயிற்றுக்குள் பெரிய அளவிலான ஏராளமான நீர்க்கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது, நீர்க்கட்டிகள் பெருங்குடல், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளுக்கு அருகே வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது.

வயிற்றுப் பகுதி முழுவதும் நீர்க்கட்டிகள் நிறைந்திருந்ததால் சிக்கலான சத்திரசிகிச்சை மூலம் அதனை அகற்ற வேண்டிய அவசியம் எழுந்தது. இத்தகைய சத்திர சிகிச்சையின் போது உடல் உறுப்புகள் சேதமடைய கூடாது என்பதால் வைத்திய குழுவினர் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் சவாலான இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டனர். இறுதியாக வயிற்றிலிருந்த 750க்கும் மேற்பட்ட நீர்க்கட்டிகள் அகற்றப்பட்டன. தற்போது அவர் நலமாக இருக்கிறார்”.

இத்தகைய பாதிப்புக்கான காரணம் என்னவெனில்,“ இது மிகவும் அரிதாக ஏற்படும் சிக்கல். சுகாதாரமான பழக்க வழக்கங்களை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும்.

அத்துடன் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை பாதுகாப்பாக கையாளுவதில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இத்தகைய செல்லப்பிராணிகள் மூலம் ஏற்படும் கிருமித்தொற்று இத்தகைய நீர்க்கட்டிகள் பாதிப்புகளுக்கு காரணமாக திகழ்கிறது.

அதனால் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்தில் இடையில் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி அதன் ஆரோக்கியத்தை பேண வேண்டும்.இதன் மூலம் நீர்க்கட்டிகள் வராமல் தற்காத்து கொள்ள இயலும்.” என்றார்.