(பாகிஸ்தான், ராவல்பிண்டியிலிருந்து நெவில் அன்தனி)  

ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய நான்காம் நாள் ஆட்டம் சீரற்ற காலை நிலை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.

பத்தரை வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் நடைபெறும் வரலாற்று முக்கியம்வாய்ந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளமை வீரர்களுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட சபையினருக்கும், கிரிக்கெட் இரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

முதல் மூன்று தினங்களிலும் 91.5 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டுள்ளதுடன் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தனஞ்சய டி சில்வா 87 ஓட்டங்களுடனும் டில்ருவன் பெரேரா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

இலங்கை துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரட்ன (59), ஓஷத பெர்னாண்டோ (40), நிரோஷன் திக்வெல்ல (33), ஏஞ்சலோ மெத்யூஸ் (31) ஆகியோர் ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.

வெள்ளி இரவு பெய்த கடும் மழை மற்றும் இன்று காலை நிலவிய மப்பும் மந்தாரமுமான காலநிலை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் விளையாடப்படாமல் பாகிஸ்தான் நேரப்படி முற்பகல் 11.30 மணிக்கு முழுமையாக கைவிடப்பட்டது.

இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி சுவாரஸ்யமற்ற முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாகத் தெரிகின்றது.