(எம்.மனோசித்ரா)

பொருளாதார முக்கியத்துவமுடைய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தவும் அதற்கான பிரதான துறைகளை இனங்கண்டு அர்ப்பணிப்புடன் செயற்படவும் இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கை விஜயம் செய்திருந்த ஜப்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மொதேகி டொசிமிட்சு மற்றும் 08 பேர் கொண்ட ஜப்பானிய உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போதே இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.  

அத்தோடு ஜப்பானுக்கு எதிர்வரும் மே மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளுமாறு இவங்கை வருகை தந்திருந்த அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் மொதேகி டொசிமிட்சு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மே மாதம் இடம்பெறவுள்ள ' ஆசிய நண்பர்கள் ' சர்வதேச மாநாடு இந்த விஜயத்துக்கான சிறந்த சந்தர்ப்பம் என்றும் அமைச்சர்  தெரிவித்துள்ளார். 

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

பொருளாதார முக்கியத்துவமுடைய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தவும் அதற்கான பிரதான துறைகளை இனங்கண்டு அர்ப்பணிப்புடன் செயற்படவும் இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

 தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம், கிழக்கு கொள்கலன் இறங்குதுறை உள்ளிட்ட துறைமுக உட்கட்டமைப்பு, வசதிகளின் அபிவிருத்தி, அதிவேக வீதிகள், விவசாயம், அதிநவீன தொலைக்காட்சி தரவுப் பரிமாற்றம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. 

தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கை ஜப்பானின் விசேட நட்பு நாடாகும் எனக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியை ஜப்பானுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளுமாறும் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள ' ஆசிய நண்பர்கள் ' சர்வதேச மாநாடு அதற்கான உகந்த சந்தர்ப்பமாகும் எனவும் ஜப்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டதுடன், ஜனாதிபதியும் அதற்கு இணக்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ச்சியாக வளர்ச்சியடையுமென நம்பிக்கை வெளியிட்டதுடன், பரஸ்பர நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அபிவிருத்தி செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான இருதரப்பு முறைமையொன்றினை நிறுவுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் நவீன தொழிநுட்பத்துடன்கூடிய ஜப்பான் நிறுவனங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பாக இது அமையுமெனவும் ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார். 

' எமது நாடு பொருளாதார ரீதியில் சிறியதாகும். ஆயினும் எம்மிடம் திறமையுள்ள, கல்விகற்ற மனிதவளம் இருக்கின்றது. இதனை அடிப்படையாகக்கொண்ட உயர் தொழிநுட்பத்துடன்கூடிய பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதே எனது அபிலாஷையாகும். இந்த இலக்கினை அடைவதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பினை நாம் எதிர்பார்க்கின்றோம் ' என ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு முதலீடுகளை, குறிப்பாக சீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற பிராந்திய நாடுகளின் முதலீடுகளை எதிர்பார்க்கின்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

பிராந்திய ஒத்துழைப்புகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், சுதந்திரமான, திறந்த இந்து - பசுபிக் பிராந்திய எண்ணக்கரு தொடர்பில் தமது நாட்டின் அர்ப்பணிப்பினை இதன்போது சுட்டிக்காட்டியதுடன், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியன பிராந்திய ஒத்துழைப்பில் முக்கிய பங்குவகிக்கின்றன என தெரிவித்தார். இதற்கு இந்து சமுத்திர வலயம் நெருக்கடிகளற்ற அமைதியான பிராந்தியமாக காணப்பட வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

வெளிநாட்டு உறவுகள் பற்றிய தமது நிலைப்பாட்டினை வலியுறுத்திய ஜனாதிபதி ;, உலகப் பலசாலிகளின் வரையறைக்குள் கட்டுப்படும் தேவை இலங்கைக்கு இல்லை. நாம் ஏனைய நாடுகளின் நட்பினை எதிர்பார்க்கும் அதேவேளை அவர்களது ஆதிக்கத்தினை மறுக்கின்றோம் எனக் குறிப்பிட்டார். 

இலங்கையில் இனங்களுக்கிடையே சமாதானம், உறுதிப்பாடு மற்றும் நல்லிணக்கத்தினை பலப்படுத்தவே தமது நாடு செயற்படுமென ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார். நல்லிணக்கத்திற்கான அரசியல் செயற்பாடுகள் பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.