சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் பி.எஸ் .மித்ரன் இயக்கத்தில் 20ஆம் திகதி வெளியாக விருக்கும் ‘ஹீரோ’ படம், கதை திருட்டு பஞ்சாயத்தில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்சினிமாவில் தற்பொழுது கதைத்திருட்டு என்கிற விடயம் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பு, ‘இப்படத்தின் கதை எம்முடையது’ என்று கதாசிரியர்கள் பலர் புகார்கள் கூறுவதும், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கூறுவதும், திரைப்படம் தொடர்பான சங்கங்களில் புகார் அளிப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில்,‘ இரும்புத்திரை’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், டிசம்பர் 20ஆம்  திகதியன்று வெளியாகவிருக்கும் ‘ஹீரோ ’படமும் கதை திருட்டு வழக்கில் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது.

இயக்குனர் அட்லீயிடம் உதவியாளராக பணிபுரியும் போஸ்கோ பிரபு என்பவர் திரைப்பட கதாசிரியர்கள் சங்கத்தில்,‘ ஹீரோ’ படத்தின் கதை தன்னுடையது என்றும், இதனை இயக்குனர் பி.எஸ். மித்ரன் திருடி ஹீரோ படமாக உருவாகி இருப்பதாகவும், படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு மற்றும் காட்சி எம்முடைய கதையில் இருப்பதாகவும் புகார் தெரிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து திரைப்பட கதாசிரியர்கள் சங்கத்தின் தலைவரான கே.பாக்கியராஜ் இதுகுறித்து முதல் கட்ட விசாரணையை இன்று தொடங்கியிருக்கிறார்.

இதனிடையே புகார் தெரிவித்த அட்லீயின் உதவியாளர் போஸ்கோ பிரபுவிற்கும், ‘ஹீரோ’ படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இவ்வழக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறி 10 இலட்ச ரூபா வரை தர முன் வந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மீதிருக்கும் பனிப்போர் காரணமாக ‘ஹீரோ’ படத்தை வெளிவரு வதில் தடை ஏற்படுத்த வேண்டுமென்று ஒரு முன்னணி தயாரிப்பாளரும், ‘அசுர’த்தனமான நடிகரும் பின்னணியில் பணியாற்றி இருப்பதாக கிசுகிசு வெளியாகியிருக்கிறது.

அதே தருணத்தில் ஹீரோ என்ற படத்தலைப்பு குறித்தும் இயக்குநர் மணிகண்டன், இயக்குநர் எஸ் எஸ் குமரன், கன்னட நடிகர் சுதீப், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா என பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் திட்டமிட்டபடி இந்த படம் டிசம்பர் 20ஆம் திகதி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதிபட தெரிவித்திருக்கிறார்கள்.