இந்தியாவில் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், வாக்களிப்பு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஒருவர் வெங்காய மாலை அணிந்து சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

நாடு முழுவதும் வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழைகள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஹோட்டல்களில் வெங்காயம் பயன்படுத்துவதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் ஒருவர், வெங்காய மாலை அணிந்து மனுதாக்கல் செய்ய வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். தினகரனின் அ.ம.மு.க.-வில்  பணியாற்றி வரும் இவர், நடைபெறவுள்ள ஊராட்சி மன்றத் தேர்தலில் 20ஆவது வாக்களிப்பு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தார். 

இந்நிலையில், மதுரை கிழக்கு ஒன்றிய ஊராட்சி அலுவகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அவர், கழுத்தில் வெங்காய மாலை அணிந்து வந்துள்ளார். 

“வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டிக்கும் விதமாக இவ்வாறு வந்தேன்” என  அவர் தெரிவித்துள்ளார்.