நாட்டின் ஊடக சுதந்­தி­ரத்­திற்கு  தனது ஆட்­சி­க்கா­லத்தின் போது  எவ்­வித அழுத்­தங்­களும்  பிர­யோ­கிக்­கப்­ப­ட­மாட்­டாது  என்று  உறு­தி­ய­ளித்­துள்ள ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ எந்­த­வொரு நியா­ய­மா­ன­வி­மர்­ச­னத்­திற்கும் இட­ம­ளிக்­கப்­படும். நாட்­டுக்கும் நாட்டின் நற்­பெ­ய­ருக்கும் ஏற்­ற­வ­கையில்  ஊட­கப்­ப­ணியில் ஈடு­பட்டு   ஊட­கங்­களின் மூலம்  நாட்­டுக்கு மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய   பொறுப்­புக்­களை   நிறை­வேற்றுவ­தற்கு   அனைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­களும்   நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்  என்றும்  வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். 

ஊடக நிறு­வ­னங்­களின்  உரி­மை­யா­ளர்­களை   நேற்று  முன்­தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே   ஜனா­தி­பதி  கோத்­த­பாய ராஜ­பக் ஷ  இவ்­வாறு  தெரி­வித்­தி­ருக்­கின்றார். புதிய ஜனா­தி­ப­தி­யாக  பத­வி­யேற்­றதன் பின்னர்   ஊடக நிறு­வ­னங்­களின்  உரி­மை­யா­ளர்­களை  சந்­தித்­துள்ள   ஜனா­தி­பதி  எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை   ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னிகள், மற்றும்  பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு   ஏற்­பா­டு­களை செய்­துள்ளார். 

புதிய ஜனா­தி­பதி  பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து  பிர­தமர்   மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் இடைக்­கால அர­சாங்­கமும்   பத­வி­யேற்­றுள்­ளது.  இந்த நிலையில்   ஊடக  சுதந்­தி­ரத்தின்  அவ­சியம் குறித்து   உணர்ந்­துள்ள  ஜனா­தி­பதி  கோத்­த­பாய ராஜ­பக் ஷ  தனது ஆட்­சியில்   ஊடக சுதந்­தி­ரத்­திற்கு  எவ்­வித அழுத்­தங்­களும்  பிர­யோ­கிக்­கப்­ப­ட­மாட்­டாது  என்று   உறுதி அளித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டா­கவே அமைந்­துள்­ளது. 

ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக் ஷ பத­வி­யேற்­ற­ பின்னர் சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வி­னரால்  விசா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தனர். சில இணை­ய­தள ஊடக நிறு­வ­னங்கள்  சோத­னைக்கும்  உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.  முன்னாள்   நிதி அமைச்சர்  மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு   சார்­பாக  செயற்­பட்­ட­தாக  கூறி பெண் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரும்   விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார். இவ்­வா­றான  சம்­ப­வங்கள்   ஊடக சுதந்­தி­ரத்­திற்கு  மீண்டும் அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுமோ என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.  

இந்த நிலை­யில்தான் ஊடக நிறு­வ­னங்­களின் உரி­மை­யா­ளர்­களை சந்­தித்த  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ  ஊட­கங்­க­ளுக்கு எத்­த­கைய அழுத்­தங்­களும் பிர­யோ­கிக்­கப்­ப­ட­மாட்­டாது என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். அத்­துடன் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மக்கள்  பெரும் எதிர்­பார்ப்­புக்­க­ளுடன்   நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக   என்னை தெரி­வு­செய்­துள்­ளனர்.  அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும்   அரச அதி­கா­ரி­க­ளி­னதும்    வினைத்­தி­றனை அதி­க­ரித்தல்,  ஊழலை ஒழித்தல்,  மற்றும்  பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்­பன   அவற்றில்  முக்­கி­ய­மா­ன­வை­யாகும்.  இந்த நோக்­கத்தை அடைந்­து­கொள்­வ­தற்கு  ஊட­கங்­களின் ஒத்­து­ழைப்பு எனக்கு குறை­வின்றி கிடைக்கும் என்று  நம்­பு­வ­தா­கவும்    ஜனா­தி­பதி இந்த சந்­திப்­பின்­போது  நம்­பிக்கை வெளி­யிட்­டுள்ளார்.  

முத­லீடு மற்றும் பொரு­ளா­தார தொடர்­பு­களை  சர்­வ­தேச ரீதி­யாக    கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு   நாட்டின்   பிர­தி­மையை  கட்­டி­யெ­ழுப்­பு­வது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும் எனவே நாட்டின் பிர­தி­மையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும்  ஊட­கங்­க­ளுக்கு விரி­வா­ன­தொரு பொறுப்பு உள்­ள­தென்று சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி கடந்த சில நாட்­க­ளாக பேசப்­படும் சுவிஸ்  தூத­ரக அதி­கா­ரி­யொ­ரு­வ­ருடன்  சம்­பந்­தப்­பட்ட விட­யத்தில்   நாட்டின் ஊட­கங்கள்   நடந்து­கொண்ட விதம்  குறித்து  தனது மகிழ்ச்­சி­யையும்  வெளி­யிட்­டி­ருக்­கின்றார். 

நாட்டில்  யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில்  ஊடக சுதந்­தி­ரத்­திற்கு  பெரும் அச்­சு­றுத்­த­லான நிலைமை  மேலோங்­கி­யி­ருந்­தது. 1994ஆம் ஆண்டு   நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க  வெற்­றி­பெற்­றி­ருந்தார்.  சமா­தா­ன­ தே­வ­தை­யாக   காட்சி தந்த  ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவின் ஆட்­சி­கா­லத்தில்  விடு­தலைப் புலி­க­ளு­ட­னான சமா­தானப் பேச்சு நடை­பெற்­றது.   அந்தப் பேச்­சு­வார்த்தை 1995ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து பெரும் யுத்தம் மீண்டும் ஆரம்­ப­மா­னது. 

இந்த  காலப்­ப­கு­தியில்   ஊடக சுதந்­திரம் என்­பது  பாதிக்­கப்­பட்­டது.  ஊடக  தணிக்­கையும்   அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.  யுத்தம் தொடர்­பாக செய்­தி­களை உட­ன­டி­யாக வெளி­யிட முடி­யாது.  ஊடகத் தணிக்கை அதி­கா­ரி­யிடம் செய்­தி­களை அனுப்பி  தணிக்­கையின் பின்­னரே  அவற்றை  வெளி­யி­டக்­கூ­டிய நிலைமை அன்று காணப்­பட்­டது.  அத்­துடன்  ஊட­க­வி­ய­லா­ளர்கள்  படு­கொலை செய்­யப்­படும் கலா­சா­ரமும்   உரு­வாக்­கப்­பட்­டது. 

2000ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் ஊட­க­வி­ய­லாளர் நிம­ல­ராஜன் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்தார்.  இதனைத் தொடர்ந்து   ஊடக நிறு­வ­னங்கள் மீதான அச்­சு­றுத்­தல்­களும்,  ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான தாக்­கு­தல்­களும் அரங்­கேற்­றப்­பட்­டன. 

இதனைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு  இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில்    மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக   வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து  பாது­காப்பு செய­லா­ள­ராக  தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ பத­வி­யேற்­றி­ருந்தார்.   இந்த   ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்க காலத்­திலும்   ஊடக சுதந்­திரம் என்­பது  பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது.   ஊடக  நிறு­வ­னங்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.  

யாழ்ப்­பா­ணத்தில் உதயன் பத்­தி­ரிகை நிறு­வ­னத்தின் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்டு இரு ஊழி­யர்­களும் படு­கொலை செய்­யப்­பட்­டனர். அதே­போன்று சிரச தொலைக்­காட்சி அலு­வ­ல­கமும்  தீ வைத்து எரிக்­கப்­பட்­டது.  ஊட­க­வி­ய­லா­ளர்கள்   படு­கொ­லை­செய்­யப்­பட்­டனர். கடத்­தப்­பட்டு துன்­பு­றுத்­தப்­பட்­டனர்.  இறுதி யுத்­த­கா­லப்­ப­கு­தியில்   இத்­த­கைய சம்­ப­வங்கள்   கூடு­த­லாக  அரங்­கேற்­றப்­பட்­டன. 

இறுதி யுத்­த­கா­லப்­ப­கு­தியில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா   குமா­ர­துங்க காலத்தில் விதிக்­கப்­பட்­ட­தை­யப்­போன்று  ஊடகத் தணிக்கை அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆனால்   ஊடக நிறு­வ­னங்கள் தமக்குள்  சுய தணிக்கை செய்யும் நிலைமை  உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது.  இவ்­வாறு   ஊடக சுதந்­தி­ரத்­திற்கு  தொடர்ச்­சி­யா­கவே அச்­சு­றுத்தல் விடுக்­கப்­படும் நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.  

2015ஆம் ஆண்டு  இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன   ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில்   நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றது.   இத­னை­ய­டுத்து  ஊடக சுதந்­திரம் என்­பது   ஓர­ள­விற்கு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.  அர­சாங்­க­மா­னது 19ஆவது திருத்த சட்­டத்­தினை கொண்டு வந்­ததன் மூலம்  சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் உரு­வாக்­கப்­பட்­டன. தகவல் அறியும் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. 

 இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளினால்  ஊடக சுதந்­திரம்  ஓர­ள­விற்கு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.   அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை விமர்­சித்து    கருத்­துக்­களை தெரி­விக்கும்  அளவு ஊடக சுதந்­திரம்   அந்த ஆட்­சி­கா­லத்தில் நில­வி­யது.  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க   பாரா­ளு­மன்­றத்­திலும்  வெளி­யிலும்  ஊடகத் தரப்­பி­னரை  விமர்­சித்து வந்­த­போ­திலும்   அத­னையும் கண்­டிக்­கக்­கூ­டிய சுதந்­திரம் நாட்டில் நில­வி­யது.  

இவ்­வாறு ஊடக சுதந்­தி­ரத்தை நிலை­நாட்­டு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் பிர­தமர்   ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும்  நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்­தனர்.  இவ்­வாறு உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட   ஊடக சுதந்­தி­ர­மா­னது  புதிய   ஆட்­சி­யிலும் நிலை­நாட்­டப்­ப­ட­வேண்டும் என்­பதே மக்­க­ளி­னதும் ஊட­கத்­து­றை­யி­ன­ரதும்  சர்­வ­தே­சத்­தி­னதும்   நிலைப்­பா­டாக உள்­ளது.  

இதற்கு  கட்­டியம் கூறும் வகை­யி­லேயே ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ  ஊடக  சுதந்­திரம் தொடர்பில்   தெரி­வித்த   கருத்­துக்கள்  அமைந்­துள்­ளன  ஜனா­தி­ப­தியின் இந்த கருத்­துக்கள் நாட்டில்   ஊடக சுதந்­திரம் அமுலில் இருக்கும் என்­ப­தற்கு  நம்­பிக்கை  ஊட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது. 

ஒரு­நாட்டில்  ஊடக சுதந்­திரம்  இருக்­கின்­றது என்­ப­தற்­காக   அதனை  தவ­றாகப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு   ஊட­கங்கள்  முனை­யக்­கூ­டாது. இவ்­வாறு தவ­றாக பயன்­ப­டுத்தும்  நிலைமை உரு­வாகும் போதுதான் அதற்கு  எதி­ராக அரசாங்கமானது நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலைமை உருவாகின்றது.  கடந்த காலங்களில் நாட்டில் யுத்தம்    இடம்பெற்று வந்தமையினால்    ஊடக சுதந்திரத்தில் தலையிடும் நிலைமை  அன்றைய  அரசாங்கங்களுக்கு  ஏற்பட்டிருக்கலாம்.  ஆனால்  அத்தகைய தலையீடும் தவறானதேயாகும். 

தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் ஆகிவிட்டன. எனவே இனிமேல் ஊடக சுதந்திரத்தில்  தலையிட வேண்டிய  அவசியம் எந்த அரசாங்கத்திற்கும் ஏற்படமாட்டாது. ஊடகங்கள்  தமக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை உரிய வகையில் பயன்படுத்தி மக்களினதும் நாட்டினதும்  நலனுக்காக   செயற்படவேண்டியது இன்றியமையாததாகும். 

தற்போதைய சுவிஸ் தூதரக பெண் அதிகாரி விடயத்திலும் பல ஊடகங்கள்  தவறான வழியில் செயற்படுவதாக   மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அறிக்கையொன்றின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறது.  எனவே இத்தகைய   வெறுக்கத் தக்க செயற்பாடுகளை    ஊடகங்கள் கைவிடவேண்டும்.  தற்போதைய நிலையில் ஊடக சுதந்திரத்தை   பாதுகாப்பதற்கு  புதிய  ஜனாதிபதியும் அரசாங்கமும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை  தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என்று  வலியுறுத்த விரும்புகின்றோம்.


இன்றைய வீரகேசரியின் ஆசிரியர் தலையங்கம்