(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையிலான  ஒப்பந்தம் அல்லது எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்ய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பிலான அறிவிப்பை உயர் நீதிமன்றில் சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்ஸானா ஜெமீல் இன்று  வெளியிட்டார். 

அத்துடன் இதுவரை குறித்த ஒப்பந்ததில் கைச்சாத்திடுவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்ஸானா ஜெமீல் இதன்போது நீதிமன்றுக்கு அறிவித்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையில்  ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் ஊடாக அரசியலமைப்பு உறுப்புரைகள் மீறப்படுவதாக அறிவிக்குமாறும் அந்த ஒப்பந்தம் செயற்படுத்தபடுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்கக்  கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று  அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட போதே அவர் இதனை நீதிமன்றுக்கு தெளிவுபடுத்தினார்.

நீதியர்சர் புவனேக அலுவிஹாரே தலைமையிலான எல்.டி.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய நீதியர்சரகள் குழாம் முன்னிலையில்  இன்று மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன் இதன்போது ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் மனுக்கள் மீதான பரிசீலனையை மார்ச் மாதம் 25 ஆம் திகதி பரீசீலிப்பதாகவும் அறிவித்தது.