இந்தியாவில் இரண்டு தலை நாகத்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்க மறுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ளது மிட்னாபூர் நகரம். இப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் மக்களிடம் இரண்டு தலை கொண்ட நல்ல பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்த பாம்பை தங்களிடம் ஒப்படைக்கும்படி மக்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள், “இரண்டு தலை கொண்ட பாம்பு புராண நம்பிக்கையுடன் தொடர்புடையது. எனவே, அதை தர முடியாது” என்று கூறி, பாம்பை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்தனர்.

இதுகுறித்து வனத்துறையின் ஊர்வனவியல் ஆராய்ச்சியாளர் கூறுகையில், “சில குழந்தைகள், ஒரு கையில் இரண்டு கட்டை விரல்கள், காலில் 6 விரல்களுடன் பிறப்பதுண்டு. அதுபோன்ற ஒரு உயிரியல் சார்ந்த பிரச்னைதான் இது; இதில், புராண நம்பிக்கையுடன் தொடர்புடையது என்று கூறுவதற்கு ஒன்றுமில்லை.

இதுபோன்ற உயிரினங்களின் ஆயுட்காலம், அவற்றை காப்பகத்தில் வைத்திருப்பதன் மூலம் அதிகரிக்கிறது. உரிய முறையில் பாதுகாக்கப்பட்டால், இந்த பாம்பின் ஆயுட் காலத்தை அதிகரிக்க முடியும்” என்றார்.