மலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூடி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன. 

இந்த சாதனைகளை ஆண்கள் மாத்திரமே தனக்கென சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் மலையக பெண்களும் சலைத்தவர்கள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு புஸ்ஸல்லாவ கட்டுகித்துலை பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவை சேர்ந்த சின்னகருப்பன் பவாணிஸ்ரீ என்ற சிங்க பெண் தற்போது நேபாளத்தில் நடந்து முடிந்த 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் கத்தி சண்டையில் பங்குபற்றி வெங்கல பதக்கத்தை வென்று வெற்றியை தனதாக்கி கொண்டார். 

இது இலங்கைக்கும் குறிப்பாக மலையகத்திற்கும் மலையக பெண்களுக்கும் பெருமையை தேடிக் கொடுத்து உள்ளது

புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்டம் என்பது மலையகத்தில் காணப்படும் மிகவும் பின்தங்கிய பிரசேத்தில் இருந்து இந்த சாதனையை நிலை நாட்டியமை பெருமையிலும் பெருமை, சாதனையிலும் சாதனை என்று தான் சொல்ல முடியும்.

சின்னகருப்பன் பவாணிஸ்ரீ தனது ஆரம்ப கல்வியை பெரட்டாசி தோட்டம் மேமொழி தமிழ் வித்தியாலயத்திலும் தொடர்ந்து அயரி பிரிவில் அமைந்திருக்கும் அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் சாதாரணதரம் வரை கல்வி பயின்று உள்ளார். தொடர்ந்து வறுமை காரணமாக கல்வியை நிறுத்திவிட்டு தொழிலுக்கு சென்றுள்ளார். தாய் ஏ.தனலெட்சுமி தந்தை எம். சின்னக்கருப்பன் இருவரும் தோட்ட தொழிலாளிகள் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கின்றனர்.

சின்னகருப்பன் பவாணிஸ்ரீ தற்போது கண்டி பல்லேகலையில் அமைந்திருக்கும் லீனியா என்று அழைக்கப்படும் பிரபல ஆடைதொழிற்சாலையில் தொழில் புரிந்து வருகின்றார். இந்த ஆடைத் தொழிற்சாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆசிரி விஜேசிங்க தலைமையில் எல்.எப்.சீ (LFC) விளையாட்டு கழகம் ஒன்று நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது. 

இந்த விளையாட்டு கழகம் மூலம் நேபாளத்தில் இம்முறை நடைபெற்ற 13 வது தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இந்த பெண்மணியுடன் 23 பேர் கலந்துக் கொண்டனர். 

இதன் போதே சின்னகருப்பன் பவாணிஸ்ரீ கத்தி சண்டை போட்டியில் கலந்துக் கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார். 

இவருடன் சென்ற அனைவரும் பதக்கங்கள் வென்று நாடு திரும்பி உள்ள அதேவேளை மலையக பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சின்னகருப்பன் பவாணிஸ்ரீ வெற்றி பெற்றமை சாதனைக்குறியதே.