(பாகிஸ்தான், ராவல்பிண்டியிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் 5.2 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக கைவிடப்பட்டது.

மூன்றரை மணித்தியாலங்கள் தாமதத்தின் பின்னர் இன்று பிற்பகல் 1.10 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணி) தொடர்ந்த மூன்றாம் நாள் ஆட்டம் 27 நிமிடங்கள் விளையாடப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டு தேநீர் இடைவேளைக்குப் பின்னர் பிற்பகல் 3.35 மணிக்கு (இலங்கை நேரப்படி 4.05 மணி) முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டபோது இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

திறமையாக துடுப்பெடுத்தாடிவரும் தனஞ்சய டி சில்வா 87 ஓட்டங்களுடனும் டில்ருவன் பேரேரா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீன் ஷா 83 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இன்று பிற்பகல் 1.37 மணிக்கு ஒளி மாணியைக் கொண்டு வெளிச்சத்தைப் பரீட்சித்த மத்தியஸ்தர்கள் போட்டிக்கு தேவையான போதிய வெளிச்சம் இல்லை எனத் தீர்மானித்து பிற்பகல் 1.37 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.07 மணி) போட்டியை இடைநிறுத்தினர்.

மூன்றாம் நாளான இன்றைய தினம் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்தது. தனஞ்சய டி சில்வா 72 ஓட்டங்களிலிருந்தும் டில்ருவன் பெரேரா 6 ஓட்டங்களிலிருந்தும் தங்களது இன்னிங்ஸ்களைத் தொடர்ந்தனர்.

5.2 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட இந்த ஆட்டநேரப் பகுதயில் இலங்கை அணி தனது மொத்த எண்ணிக்கைக்கு 19 ஓட்டங்களை சேர்த்தது.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் முதலாம் நாளன்று 68.1 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்டதுடன் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய திமுத் கருணாரட்ன 59 ஓட்டங்களையும் ஓஷத பெர்னான்டோ 40 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 31 ஓட்டஙய்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் குறித்த நேரத்துக்கு ஆரம்பித்த போதிலும் அன்றைய தினம் 18.2 ஓவர்களே வீசப்பட்டதுடன் இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு 61 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டதுடன் மேலும் ஒரு விக்கெட் வீழ்ந்தது. நிரோஷன் திக்வெல்ல 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது தனஞ்சய டி சில்வா 72 ஓட்டங்களுடனும் டில்ருவன் பெரேரா 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று தினங்களில் 270 ஓவர்கள் வீசப்பட்டிருக்கவேண்டும். ஆனால் 91.5 ஓவர்களே வீசப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரானது ஐ.சி.சி. டெஸ்ட் வல்லவர் தொடராகவும் அமைகின்றது. பாகிஸ்தானில் டெஸ்ட் வல்லவர் தொடர் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

விரிப்புகள் அகற்றப்படுவதில் தாமதம்

மூன்றாம் நாள் ஆட்டம் காலை 10.45 மணியளவில் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்புகள் இருந்துது. ஆனால், விரல்விட்டு எண்ணக்கூடிய மைதான உதவியாளர்களே பணியில் ஈடுபட்டுள்ளதாலும் ஆடுகளத்தையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் மூடியிருந்த விரிப்புகளை வேளையோடு அகற்றுவதற்கு மத்தியஸ்தர்கள் அனுமதி வழங்காததாலும் முதலாவது ஆட்ட நேர பகுதி முழுமையாக விளையாடப்படாமல் கைவிடப்பட்டது.

இலங்கை போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான மைதான உதவியாளர்கள் இருப்பதால் இத்தகைய தாமதங்கள் தவிர்க்கப்படுவதாக கிரிக்கெட் நேரடி வர்னணையாளார்கள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானில் பத்து வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக விளையாடப்பபடும் இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெரும்பாலும் சுவாரஸ்யமின்றி முடிவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.