யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று இரண்டாவது தடவையாகத் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டு தடவைகள் வரவு செலவு திட்டம் சபையில் தோற்கடிக்கப்பட்டாலும் தனக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக வரவு செலவு திட்டம் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டதாக முதல்வர் இமானுவேல் ஆனல்ட் பிரகடனப்படுத்தியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சிறப்பு அமர்பு முதல்வர் இமானுவேல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய அமர்பில் 43 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துகொண்டவர்களுள் வரவு செலவு திட்டத்திற்கு, 19 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 12 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்கள் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்று , 28 ஆம் திகதி முதலாவது வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

அதன் போது வரவு செலவு திட்டத்திற்கு 16 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 21 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதே வேளை 7 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொண்டிருக்கவில்லை.

தொடர்ந்து, கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்பின் மாநகர சட்டம் 215ஏ இன் பிரகாரம் வரவு செலவு திட்டத்தை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற முதல்வரின் கருத்துக்கு அமைவாக இன்றைய தினம் வரவு செலவு திட்டம் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்தது.

இன்றைய சபை அமர்பின் போது உறுப்பினர்களிடையே கருத்து மோதல்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.