சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘ஹீரோ ’படத்தில் அவர் சுப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

‘இரும்புத்திரை’ என்ற படத்தை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஹீரோ’. இதில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் , அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜோர்ஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் ஒடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கு பற்றிப் பேசிய படத்தொகுப்பாளர் ரூபன்.“ இந்தப்படத்தில் ஒரு காட்சியில்கூட சிகரெட் புகைப்பது போன்றோ, மது அருந்துவது போன்றறோ, வன்முறை காட்சிகளோ இடம்பெறவில்லை. இயக்குனர் பி.எஸ்.மித்ரன் சிவகார்த்திகேயனை சுப்பர் ஹீரோவாக்கி, சமூகத்திற்குத் தேவையான செய்தி ஒன்றை வித்தியாசமான கோணத்தில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.” என்றார்.

படத்தின் நாயகியாக அறிமுகமாகும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவிக்கையில்,“ இந்தப்படத்தில் நான்கு சுப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்கள். இயக்குனர் பி.எஸ். மித்ரன், ஒளிப்பதிவாளர் ஜோர்ஜ், இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மற்றும் புதிய அவதாரம் எடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் என நான்கு தூண்கள் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை படமாளிகையில் சென்று பாருங்கள். அதன் பிரம்மாண்டத்தை கண்டு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

படத்தின் முன்னோட்டத்தை முதன்முதலாக சிவகார்த்திகேயனின் ரசிகரும், ஹீரோ படத்திற்காக அறிவிக்கப்பட்ட போட்டியில் முதல் பரிசை பெற்றவருமான கோகுல் என்பவர் வெளியிட்டார். இந்தப் படம் இம்மாதம் 20ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதனிடையே இந்த ஆண்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை என்ற இரண்டு படம் வெளியாகியிருக்கிறது. இதில் நம்மவீட்டு பிள்ளை வெற்றிப் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது படமாக வெளியாகவிருக்கும் ஹீரோ படமும் வசூலை வாரி குவிக்கும் என்கிறார்கள் திரையுலக வணிகர்கள்.