இலங்கை உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக் கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அனுசரணையுடன் இணைந்து மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான உயர் கல்விக்கான தேசிய நிலையம் ஏற்பாடு செய்த சமூக விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் மீதான இரண்டாவது சர்வதேச மாநாடு 2019 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இவ்வருட மாநாடு ‘ ஸ்திரத்தன்மையை நோக்கிய அபிவிருத்தி” என்ற தொனிப்பொருளுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இவர் உரையாற்றுகையில்,

சமூக விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் மீதான இரண்டாவது சர்வதேச மாநாட்டில் உரை நிகழ்த்தியிருந்த இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து, இயற்கை மற்றும் மனிதனுக்கிடையிலான அமைதியான சகவாழ்வுடனான நீண்ட  பாரம்பரியம் மற்றும் வரலாற்றினை இலங்கையும் இந்தியாவும் கொண்டிருக்கின்றன என குறிப்பிட்டார். “சூழலை பேணிப் பாதுகாக்கும் பெறுமானங்களையும் இரு நாடுகளும் கொண்டிருக்கின்றன. பசுமையை நோக்கிச்செல்லுதல் இலங்கை இந்தியாவைப் பொறுத்த வரையில் புதிய விடயம் இல்லை ஆரம்பகாலம் முதலே எம்மிடையில் காணப்பட்ட ஒன்றாகும், அந்த மரபையே இலங்கையும் இந்தியாவும் மேம்படுத்துகின்றன”, எனவும் அவர் இங்கு சுட்டிக் காட்டினார். 

மேலும், சுத்தம், பசுமை, நேர்த்தி மற்றும் நிலைபேறு ஆகியவற்றுடனான அபிவிருத்திக்கான கண்டுபிடிப்புக்களின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தியிருந்ததுடன் இந்தியாவில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியை கொண்டிருக்கும் யுனிகோன் ஆரம்பநிலை கம்பனிகள் 26 உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். ஈபே(Ebay)  மற்றும் சிஸ்கொலப்ஸ்(Syscolabs) போன்ற உலக பிரசித்தம் பெற்ற நிறுவனங்களுக்கு முக்கிய மென்பொருட்களை (Software) வழங்குகின்ற, செய்மதிகளை உருவாக்குகின்ற இலங்கையின் இளம் விஞ்ஞானிகள் மத்தியில் காணப்படும் புத்தாக்க ஆர்வத்தை அவர் பாராட்டியிருந்தார். 

பசுமையானதும் சுத்தமானதுமான பூமியை கட்டி எழுப்புவதில் இலங்கையும் இந்தியாவும் முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து தெரிவித்த உயர் ஸ்தானிகர், இன்டர்நஷனல் சோலர் அலையன்ஸ் (International Solar Alliance) போன்ற புதுப்பிக்கத்தக்க வகையிலான சர்வதேச முன்னெடுப்புக்களில் இலங்கையும் இந்தியாவும் ஸ்தாபக உறுப்பினர்களாக இருப்பதனை நினைவூட்டினார். இலங்கையில் சூரியக்கல திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டொலரை கடனுதவியாக வழங்குவதாக அறிவித்தது. கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலமாக விஞ்ஞானம்  மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக இலங்கையும் இந்தியாவும் இணைந்து  நிதி உதவியை வழங்கி வருகின்றன அத்துடன் அனர்த்த முகாமைத்துவம், தொலை-மருத்துவம் , தொலைக் கல்வி ஆகியவற்றின் ஊடாக பிராந்திய நலன்புரி தேவைகளை நிவர்த்தி செய்யவும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கும் உதவும் தெற்காசிய செய்மதி திட்டத்தின் பங்காளர்களாகவும் இரு நாடுகளும் உள்ளன. 

மஹாத்மா காந்தி அவர்களை மேற்கோளிட்டு கருத்து தெரிவித்திருந்த உயர் ஸ்தானிகர் , “ நாம் செய்யும் செயல்கள் மற்றும் எம்மால் செய்யக்கூடியவை உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண போதுமானவை”. இலங்கையின் இளம் புலமையாளர்களுக்காக இந்திய அரசினால் வழங்கப்படும் பல்வேறு புலமைப் பரிசில்கள் மற்றும் பயிற்சி திட்டங்களின் பலன்களை  சாத்தியமான மாற்று வழிகள் தொடர்பாக சிந்திக்கும் இளம் புலமையாளர்கள் முழுமையாக பெற்றுக்கொள்ளவேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.