இன்றைய சூழலில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தங்களது ஸ்மார்ட்தொலைபேசிளை கண்களுக்கு நேராக வைத்து, கழுத்தை நேராக வைத்து பார்ப்பதில்லை. 

அதற்கு மாற்றாக தங்களுக்கு சௌகரியமான முறையில் ஸ்மார்ட்தொலைபேசியை கையில் பிடித்துக் கொண்டு, கழுத்தை குனிந்து கொண்டு பார்க்கிறார்கள். இதனால் கழுத்து பகுதியில் வலி ஏற்படுகிறது. அத்துடன் கழுத்து பகுதியில் உள்ள நரம்புகளில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு, வலியை உண்டாக்குகிறது. இதற்கு மருத்துவ துறையில் தற்போது Text Neck Syndrome  என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

கழுத்துப் பகுதியானது நீங்கள் நிமிர்ந்து நிற்கும் பொழுது 5 முதல் 6 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். ஆனால் நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்தொலைபேசிகளை பார்ப்பதற்காகக் குனிந்தால்... தலையின் சுமை இருபத்தைந்து கிலோவிற்கு மேல் அதிகரித்துவிடும். இத்தகைய கூடுதலான எடையை நீங்கள் தொடர்ச்சியாக மூன்று மணித்தியாலம் அல்லது நான்கு மணித்தியாலம்  வரை நாளாந்தம் பார்த்தால்... உங்களது கழுத்து பகுதியில் வலி ஏற்படுவது உறுதி.

கழுத்து பகுதியில் முதலில் வலி தோன்றும். பிறகு முதுகுத்தண்டிற்கும் பரவும்.. பிறகு முதுகுத்தண்டின் உள்ள எலும்பில் வலி உருவாகும்.  பிறகு முதுகுத்தண்டு எலும்பு பகுதியில் இருக்கும் நரம்புகளில் வலி ஏற்படும்.  பிறகு அதுவே நாட்பட்ட வலியாக தோன்றும். கவனக்குறைவு அல்லது போதிய விழிப்புணர்வின்மையால் நீங்கள் செய்யும் சிறு தவறால், கழுத்துப் பகுதியில் நாட்பட்ட வலியை நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள். 

இதற்கு நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு, நிவாரணம் பெறவேண்டும். இல்லையென்றால் இதன் காரணமாக மன அழுத்தம் உருவாகும். கவன சிதறல் அதிகரிக்கும். அதே தருணத்தில் நாட்பட்ட வலியினை குறைவான காலகட்டத்தில் கண்டறியவேண்டும். அதை அலட்சியப்படுத்தினால் அந்த வலி நாளடைவில் நரம்பு தொடர்பான நாட்பட்ட வலியாக மாறிவிடக்கூடும்.

 வலி நிவாரண சிகிச்சையின் அடிப்படையான வலி நிவாரண சிகிச்சைகள், அதிர்வலை சிகிச்சைகள் மற்றும் அட்வான்ஸ் வலி நிவாரண சிகிச்சைகள் என மூன்று வகையிலான சிகிச்சை முறைகள் மூலம் இந்த பாதிப்பைக் குணப்படுத்தலாம். அதன் பின்னர் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் தான் நீங்கள் ஸ்மார்ட்தொலைபேசிகளை பயன்படுத்தவேண்டும். இல்லையென்றால் மீண்டும் இத்தகைய கழுத்து வலி வரக்கூடும். 

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.