(ஆர்.யசி)

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் அரசியல் அமைப்பு சபை இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர்  புதிய அரசாங்கம் பதவியேற்றதை  அடுத்து இவ்வாறு அரசியல் அமைப்புச் சபை கூடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நிலையில் இன்றைய அரசியல் அமைப்பு சபை பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இல்லாதே கூடியுள்ளது. 

அரசியல் அமைப்பு சபையில் 10 உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில்  சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் உத்தியோகப்பூர்வ அதிகாரத்திற்கு அமைய தெரிவுச் செய்யப்படுவர். 

அவர்களில் இடைக்கால அரசாங்கதின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. அதேபோல் எதிர்க் கட்சித் தலைவராக  சஜித் பிரேமதாசவை பெயரிடப்பட்டுள்ள போதிலும் கூட பாராளுமன்றம் கூடி இன்னமும் எதிர்க்கட்சி தலைவரை உத்தியோகபூர்வமான நியமிக்காத நிலையில் அவரும்  பங்கேற்கவில்லை.  எனினும் குழுவில் இடம்பெற்றுள்ள ஏனைய 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 சிவில் சமூக பிரதநிதிகள் நேற்றைய  கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.  

இந்நிலையில் இன்றைய அரசியல் அமைப்பு சபை கூட்டத்தின் போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி தீபாலி விஜேசுந்தர ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அவருக்கான வெற்றிடத்தில் வேறொருவரை நியமிப்பது குறித்து மிக்கிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது. 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி தீபாலி விஜேசுந்தர ஓய்வை அடுத்து  அப்பதவிக்கு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.டி.ஆர்.எஸ்.அபேரட்னவை நியமிக்குமாறு அரசியலமைப்பின் 107 (1) மற்றும் 41 அ (1) சரத்துக்களுக்கு அமைய ஜனாதிபதி பரிந்துரைத்து அரசியல் அமைப்பு சபைக்கு அனுப்பியிருந்தார். 

அதற்கமைய ஜனாதிபதி  முன்வைத்துள்ள பரிந்துரையை கூடிய அரசியலமைப்புப் பேரவை ஏகமனதாக அங்கீகரித்தது.