சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு தங்களுக்கு பிடித்த வகையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 

“இன்னும் பல அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தி காட்டுங்கள் தலைவா..” என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து தெரிவித்து விட்டு, அவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ‘பேட்ட’ படத்தின் வெளியிடப்படாத போஸ்டரை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

மூத்த தயாரிப்பாளரும், 90 படங்களுக்கு மேல் தயாரித்தவருமான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி ரஜினிகாந்தின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு,

“ஏறுபவனுக்கு இமயமலை

எதிர்ப்பவனுக்கு எரிமலை

இந்த அண்ணாமலை..”

என செம பஞ்ச் வசனத்துடன், தனது மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ‘தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவருடைய பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதன் போது இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகைகள் மீனா, குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்குபற்றி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அத்துடன் திரையுலகப் பிரபலங்களான நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகரும், இயக்குனருமான ராகவேந்திரா லோரன்ஸ் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.