(பாகிஸ்தான் ராவல்பிண்டியிலிருந்து நெவில் அன்தனி)

ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலை காரணமாக முன்னதாகவே இடை நிறுத்தப்பட்டது.

இரண்டாம் நாள் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு  நிறுத்தப்பட்டபோது இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

தனஞ்சய டி சில்வாவின் அபார அரைச் சதததின் உதவியுடன் இலங்கை வலுவான நிலையில் இருக்கின்றது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று வியாழக்கிழமை காலை தனது முதலாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்களிலிருந்து இலங்கை தொடர்ந்தது.

தனஞ்சய டி சில்வா 38 ஓட்டங்களுடனும் நிரோஷன் திக்வெல்ல 11 ஓட்டங்களுடனும் தங்களது இன்னிங்ஸ்களைத் தொடர்ந்தனர்.

இருவரும் மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவிச்சில் பாபர் அஸாமிடம் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்த நிரோஷன் திக்வெல்ல 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிவரும் தனஞ்சய டி சில்வா தனது 6 ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து 72 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அவருடன் டில்ருவன் பெரேரா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் காலை 9.45 மணிக்கு (பாகிஸ்தான் நேரப்படி) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக முற்பகல் 10.22 மணிக்கு தடைப்பட்டது. அப்போது இலஙகை அணி 5 விக்கெட்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதுவரை 7.5 ஓவர்களே வீசப்பட்டிருந்தது.

சுமார் மூன்றரை மணித்தியாலங்களின் பின்னர் பிற்பகல் 1.45 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. எனினும் 48 நிமிடங்களின் பின்னர் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இந்த ஆட்டநேரப் பகுதியில் 10.3 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.