(நா.தனுஜா)

அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிக்கும் விடயத்தைப் பொறுத்தவரை அதற்கென பிரத்யேக ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என அரசாங்க ஊடகபேச்சாளர் தெரிவித்தார்.

உயர்பதவிகளுக்கான தகுதியுடையவர்கள் தமது விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை அந்த ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்க முடியும். அதன்பின்னர் அவர்களில் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அரச நிறுவனங்களுக்கான தலைவர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அச்சந்திப்பில் புதிய அரசாங்கம் பதவியேற்று சுமார் ஒருமாதகாலம் நிறைவடையும் நிலையிலும் அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பது தாமதமடைவதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.