திருகோணமலையில் தாயாரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சிசுவின் சடலமொன்று ஒரு மாதத்திற்கு பின்னர்  இன்று (12) தோண்டி எடுக்கப்பட்டது.

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி குறைமாதத்தில் பெற்ற சிசுவை சட்டவிரோதமான முறையில் புதைத்துள்ளதாக கிராம உத்தியோகத்தரின் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்சா அவர்களின் தலைமையில் கீழ் திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர மற்றும் பொலிஸார்  முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

திருமணமாகி மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்த நிலையில் தனது கணவரை விட்டு தனிமையாக வாழ்ந்து வந்ததாகவும் இதேவேளை  தன்னுடன் பழகிய நபருடன் தொடர்பு வைத்திருந்த நிலையில் குறை மாதத்தில் பிள்ளை பிறந்ததாகவும்   இதேவேளை  ஊசி மூலமாக பிள்ளையை வெளியேற்றியதாகவும் பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிசுவின் தாயாரை சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.