நைஜரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கோர தாக்குதலில் இராணுவ வீரர்கள் 70 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

ஆபிரிக்கா - நைஜர் கடந்த சில ஆண்டுகளாகவே மாலி, நைஜர், பர்கினோ பாசோ போன்ற ஒரு சில ஆபிரிக்க நாடுகளில் கிளர்ச்சியாளர்கள்  நடமாட்டமும் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. 

நாட்டின் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை ஒடுக்குவதற்காக, நைஜர் இராணுவம் அண்டை நாடான மாலி இராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே பிரான்ஸ்,  ஆபிரிக்க நாடுகளில் தீவிரவாதத்தை  ஒடுக்குவதற்கு உதவியாக தனது இராணுவ வீரர்களை அந்நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் ஒரு சில தினங்களில் பர்கினோ பாசோ நாட்டின் சேஹல் பகுதியில் பிரான்ஸ் இராணுவத்தின் பங்கு குறித்து மேற்கு ஆபிரிக்க தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

இந்நிலையில்,  நைஜர் நாட்டின் உவால்லம் பகுதியில் முகாமிட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள்  நடத்திய தாக்குதலில் 70 வீரர்கள் உயிரிழந்தனர்.

மாலியுடனான எல்லையிலுள்ள இல் அட்டெஸ் என்ற நகரில்இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடுமையான மோதலொன்று இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள நைஜரின் பாதுகாப்பு செயலாளர் பெருமளவு எண்ணிக்கையிலான கிளர்ச்சியாளர்கள் இந்த தளத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ளார்

உவால்லம் பகுதிகளில் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புடைய இயக்கத்தினர் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று இரவு திடீரென இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், 70 வீரர்கள் உயிரிழந்தாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது.