(நா.தனுஜா)

அரசாங்கம் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகின்றது என்றும், அதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் வெளியாகும் செய்திகள் எவ்வித அடிப்படையும் அற்றவை என கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

அத்துடன் இந்த உடன்படிக்கையைக் கருத்திலெடுக்க வேண்டுமா என்ற தீர்மானத்தை எட்டுவதற்கு அதுகுறித்த முழுமையான மீளாய்வொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே அரசாங்கம் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகின்றது என்றும், அதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் வெளியாகும் செய்திகள் எவ்வித அடிப்படையும் அற்றவையாகும்.  

எனினும் கடந்த காலத்தில் இவ்வுடன்படிக்கை தொடர்பில் இல்லாத அபாயமொன்றை நாமாகவே உருவாக்கி பிரசாரம் செய்யவில்லை. உண்மையிலேயே அதில் நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாரதூரமான விடயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அச்சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பூதாகரமாகச் சித்தரித்துவிட்டு, தற்போது அந்த உடன்படிக்கையில் 30 சதவீதமானவையே நாட்டிற்குக் கேடானது என்று   ஆளுந்தரப்பினர் கூறிவருவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.