நியூசிலாந்தில்  சுற்றுலா தளமான வைட் தீவில் அமைந்துள்ள எரிமலை, கடந்த திங்கட்கிழமை எரிமலை வெடிப்பின்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க  1,292 சதுர அடி தோல்கள் தேவை என நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து எரிமலை வெடிப்பின்போது அந்தப் பகுதியில் சுமார் 47 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவில் சிக்கிய மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்தத் தீவு முழுவதும் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் படுகாயமடைந்தவர்களின் நிலை மோசமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. வைத்தியசாலைகளில் உள்ளவர்கள் அனைவரும் 30% தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் எரிமலை வெடிப்பின் புகையைச் சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், `எரிமலை வெடிப்பினால் படுகாயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மனித தோல் தேவை' என நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதுபற்றிப் பேசியுள்ள வைட் தீவு பகுதியின் சுகாதார அதிகாரி பீட்டர் வாட்சன், ``எரிமலை வெடிப்பினால் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பல சதுர மீட்டர் அளவிலான மனித தோல்கள் தேவைப்படுகின்றன. நியூசிலாந்தில் இருந்து கிடைக்கும் தோல்கள் போதுமானதாக இல்லை. எனவே அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் 1,292 சதுர அடி தோல்கள் தேவை என உதவி கேட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

பொதுவாக தீக்காயமடைந்தவர்களின் தோல் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும், எனவே மூளைச் சாவு அடைந்தவர்களின் கனமான தோல் பகுதியை எடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருத்துவது வழக்கம். எனவே, எரிமலை வெடிப்பில் காயம் அடைந்தவர்களுக்குத் தோல் மாற்றம் செய்வதற்காகவே நியூசிலாந்து அரசு பிற நாட்டிடம் தோல் கேட்டுள்ளது. திசு வங்கி, உடல் பாகங்கள் தானம் செய்பவர்கள், இறந்த பிறகு தங்கள் உடலைத் தானம் செய்பவர்கள் போன்றவர்களிடமிருந்து இந்த தோல் சேகரிக்கப்படும்.