(நா.தனுஜா)

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் பிணை மோடியுடன் தொடர்புடைய முக்கிய சூத்திர தாரியான அர்ஜூன மசேந்திரனை இலங்கையிடம் ஒப்படைப்பது தொடர்பான தீர்மானத்தை இரண்டு வாரங்களில் அறிவிப்பதாக சிங்கப்பூர் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான ரமேஸ் பத்திரன இதனை தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. 

அதற்குப் பதிலளிக்கும் வகையில் சிங்கப்பூர் சட்டமாதிபர் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட  கடிதத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   

அதனடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் உரிய இறுதி முடிவைப் பெற்றுத்தருவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.   அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் உறுதியளித்திருப்பதால், அதுகுறித்து எவ்வித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை.

அத்துடன் உதயங்க வீரதுங்க விவகாரத்தில் சட்டமாதிபர் திணைக்களம் தலையிட்டு கோரிக்கையொன்றை முன்வைத்திருந்த போதிலும், அதற்கு துபாய் அரசாங்கம் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை என்றும் அவர் இதன்போது கூறினார்.