(பாகிஸ்தானிலிருந்து நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது முதலாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்த போதிலும் பிற்பகலில் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர்களினால் கட்டுப்படுத்தப்பட்டது.

பாகிஸ்தானில் பத்து வருடங்களின் பின்னர் நடைபெறும் இந்த வரலாற்று முக்கியம்வாய்ந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, தனது முதல் இன்னிங்ஸில் முதலாம் நாள் ஆட்டநேர முடிவின்போது 5 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

காலையில் குறித்த நேரத்துக்கு போட்டி ஆரம்பித்தபோதிலும் மாலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக 69 ஆவது ஓவரில் மத்தியஸ்தர்களினால் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆரம்ப வீரர்களான அணித் தலைவர் திமுத் கருணராட்னவும் ஓஷத பெர்னாண்டோவும் சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த போதிலும், பிற்பகல் வேளையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இலங்கை அணியைக் கட்டுப்படுத்தினர்.

திமுத் கரணாரட்னவும் ஓஷத பெர்னாண்டோவும் முதலாவது ஆட்ட நேர பகுதியில் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி 26 ஓவர்களில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். திமுத் கருணாரட்ன சுமாரான வேகத்தில் துடுப்பெடுத்தாடி 90 பந்துகளில் தனது 24ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

முதலாவது ஆட்ட நேரத்தின்போது இரண்டு எல்.பி.டபிள்யூ. கேள்விகளிலிருந்து தப்பிய திமுத் கருணராட்ன 59 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

102 பந்துகளை எதிர்கொண்ட திமுத் கருணாரட்ன 9 புவண்ட்றிகளை அடித்திருந்தார். தனது ஆட்டமிழப்பை மூன்றாவது மத்தியஸ்திரின் ஆய்வுக்கு திமுத் உட்படுத்தியபோதிலும் கள மத்திஸ்தரின் தீர்ப்பு சரியானது என அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் வெளியேறினார்.

திமுத் கருணாரட்ன தனது 63ஆவது போட்டியில் 24ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

தனது மூன்றாவது போட்டியில் முதல் தடவையாக ஆரம்ப வீரராக விளையாடிய ஓஷத பெர்னாண்டோ திறiமாகத் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது நசிம் ஷாவின் பந்துவீச்சில் ஹரிஸ் சொஹெய்லிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து குசல் மெண்டிஸ் (10 ஓட்டங்கள்), தினேஷ் சந்திமால் (2) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

போட்டியின் இரண்டாவது பகுதியில இலங்கை அணி 24 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 48 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸும் தனஞ்சய டி சில்வாவும் மத்திய வரிசையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர். இவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது நசீம் ஷாவின் பந்துவீச்சில் அசாத் ஷபிக்கிடம் பிடிகொடுத்த ஏஞ்சலோ மெத்யூஸ் 31 ஓட்டங்களுடன் களம்விட்டகன்றார். இவர் 77 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்ட்றிகளை அடித்திருந்தார்.

தன்னம்பிக்கையோடு துடுப்பெடுத்தாடிவரும் தனஞ்சய டி சில்வா 77 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்ட்றிகளுடன் 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. மறுமுனையில் நிரோஷன் திக்வெல்ல 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

ராவல்பிண்டியில் கடும் பனிமூட்டம் நிலவியதால் போட்டியின் பெரும்பகுதி ஆட்ட நேரம் மின்னொளியிலேயே விளையாடப்பட்டது.