மருத்துவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நூற்றிற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் மருத்துவமனைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதில் நோயாளியொருவர் பலியான சம்பவம் பாக்கிஸ்தானின் லாகூரில் இடம்பெற்றுள்ளது.

லாகூரில் உள்ள இதயநோயாளிகளிற்கான மருத்துவமனையிலேயே சட்டத்தரணிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டத்தரணிகள் மருத்துவமனையின் ஜன்னல்களையும் கதவுகளையும் உடைத்தனர் அங்கு காணப்பட்ட வாகனங்களை சேதப்படுத்தினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணிகள்  காவல்துறையினர் மீது கற்களை வீசியுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து பல சட்டத்தரணிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல மணிநேரம் குழப்பம் நிலவியது என தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரியொருவர் இதன் காரணமாக 70 வயது பெண் நோயாளியொருவர் உயிரிழந்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணிகளின் வன்முறை காரணமாக மருத்துவர்களும் தாதிமார்களும் மருத்துவமனையிலிருந்து தப்பியோடியதால் அவசரநோயரிகளை கவனிப்பதற்கு எவருமற்ற நிலை காணப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட மருத்துவமனையில் வரிசையில் நிற்க மறுத்த சட்டத்தரணியொருவர் மருத்துவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்தே சட்டத்தரணிகள் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டத்தரணியை தாங்கள் தாக்குவதை காண்பிக்கும் வீடியோவை மருத்துவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டமையே சட்டத்தரணிகளை அதிக சீற்றத்திற்குள்ளாக்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாக்கிஸ்தான் பிரதமரின் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.