இலங்கையின் தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாகத் தணிந்திருந்தபோதிலும் மழையுடனான காலநிலை இன்றைய தினம் மீண்டும் தொடர்கின்றது. 

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.அம்பாறை சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும்  சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

கடந்த ஒரு வாரகாலமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பெய்து வந்த மழை வீழ்ச்சியின் அளவு அதிகரித்துக் காணப்பட்ட போதிலும் தற்போது பெய்து வரும் மழை வீழ்ச்சியின் அளவு வெகுவாக குறைவடைந்திருப்பதாக வளிமண்டல வியல் தி;திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடந்த 24 மணித்தியாலத்தில் அம்பாறை பிரதேசத்தில் 16.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதிகப்படியாக அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பகுதியில் 16.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், இங்கினியாகல பகுதியில் 9.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மகஓயா பிரதேசத்தில் 4.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கல்முனைப் பிரதேசத்தில் 7.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட வானிலை அவதான நிலையம்  தெரிவிக்கின்றது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பகுதியில் 80.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதிகப்படியாகப் பதிவாகியுள்ளதாகவும், பாசிக்குடா பகுதியில் 51.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மட்டக்களப்பு பகுதியில் 43.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணி பிரதேசத்தில் 32.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மயிலம்பாவெளியில் 26.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் மாலை வேளையில் கடற் கரையினை அண்டிய பகுதியில் பலத்த காற்று வீசி வருகின்றது. கடற்கரையினை அண்மித்த பகுதியிலிருந்த பனைமரமொன்று காற்றின் தாக்கத்தினால் அடியோடு வீழ்ந்துள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


மழையுடனான காலநிலை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதுடன் சில குடியிருப்புக்களில் நீர் நிறைந்தும் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தின் சில வீதிகளில் தொடர்ந்தும் நீர் நிறைந்து காணப்படுவதால் மக்களின் போக்குவரத்திலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகக் கடற்றொழில் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. 

கடற் கொந்தளிப்புக் காரணமாக இம்மாவட்டத்தின் மீனவர்கள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளனர். அத்தோடு விவசாய நிலங்களில் நீர் நிறைந்து காணப்படுவதால் நெல் விவசாயமும், மேட்டு நிலப் பயிர்ச் செய்கையும் பாதிப்படைந்துள்ளது.