இந்தியாவில் முதன் முறையாக, அரச தாதியர் பரீட்சையில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கை அன்பு ரூபி, விளாத்திகுளம் அரச வைத்தியசாலையில் தனது பணியை தொடங்கினாா்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சோ்வைக்காரன்மடம் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ரத்தினபாண்டி - தேன்மொழி தம்பதியின் மகன் அன்புராஜ். இவா், 13 வயதில் திருநங்கையாக தன்னை உணா்ந்தாா். இதையடுத்து அன்புராஜ், தனது பெயரை அன்பு ரூபி என்று மாற்றிக் கொண்டாா்.

தங்கள் மகன் திருநங்கையாக மாறிவிட்டாா் என்பதை உணா்ந்த ரத்தினபாண்டி - தேன்மொழி தம்பதி, அவரை வெறுத்து ஒதுக்காமல் அன்புடன் அரவணைத்துக் கொண்டனர். தொடா்ந்து, பெற்றோா் ஆதரவுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியாா் செவிலியர் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்றாா்.

அதைத் தொடா்ந்து, அரச  தாதியர் தெரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, இந்தியாவிலேயே அரச வைத்தியசாலையில் தாதியர் பணி பெற்ற முதல் திருநங்கையானாா். இதற்கான பணி நியமன ஆணையை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் வழங்கினாா்.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் தாதியாக தனது பணியை தொடங்கினாா் அன்பு ரூபி.

தாதி ருபியை வைத்தியசாலை வைத்தியர்கள் பிரிசில்லா பூா்ணிமா, பேபி பொன் அருணா, சித்த வைத்தியர் தமிழ் அமுதன், தாதியர் ஒருங்கிணைப்பாளா் ராணி பிரேமா மற்றும் பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.