(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் ஊழல் மோசடி குறித்து ஆராய்வதற்காக  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவினால்  அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின்  செயற்காலத்தை நீடித்து விசாரணை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல அரசாங்கம் தீர்மானித்ததுள்ளதாக நீர்வழங்கல்  இராஜாங்க அமைச்சர் வாசுதேவ  நாணயக்கார தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தப்பட்ட அரச ஊழியர்கள்  தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இம்மாத காலத்திற்குள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். 

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இரவு அலரிமாளிகையில் இடம் பெற்ற ஆளும் தரப்பு கட்சி தலைவர்களின்  கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டாறு தெரிவித்தார்.

 நல்லாட்சி அரசாங்கத்தில் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் தேசிய நிதி மோசடி தொடர்பில் நடப்பு அரசாங்கம் புதிதாக ஆணைக்குழுவினை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட 2015-2018   வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தில் இடம் பெற்றதாக கருதப்படும்  மோசடி தொடர்பில் ஆராய விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் செயற்காலத்தை நீடித்து  துரிதகரமான விசாரணைகளை முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தில் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் அரச ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினர் மீதான அரசியல் பழிவாங்கள் குறித்து ஆராயும் நடவடிக்கைகள் எதிர்க்கட்சி அலுவலகத்தில் ஒம்புட்ஸ்மன் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. பலர்    முறைப்பாடுகளை செய்துள்ளார்கள்.

அரசியல் பழிவாங்கள் குறித்து தொடர்ந்து முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விசேட  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இம்மாத கால அளவில் அமைக்கப்படும்.

அத்துடன் நடப்பு அரசாங்கத்திலும் அரசியல் பழிவாங்கல் இடம் பெறுகின்றதா என்பது குறித்து  இக்குழு  கவனம் செலுத்தும்.   என அவர் தெரிவித்தார்.