(பாகிஸ்தான், ராவல்பிண்டியிலிருந்து நெவல் அன்தனி)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டியில் இன்று காலை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி பகல்போசன இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 89 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அணித் தலைவர் திமுத் கருணாரட்ன 57 ஓட்டங்களுடனும் ஓஷத பெர்னாண்டோ 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

ஆரம்ப வீரர்களான இவர்கள் இருவரில் திமுத் கருணாரட்ன சுமாரான வேகத்துடன் துடுப்பெடுத்தாட, ஓஷாத பெர்னாண்டோ மிகவும் திதானத்துடன் துடுப்பெடுத்தாடினார்.

தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் தடவையாக ஆரம்ப வீரராக விளையாடும் ஓஷாத பெர்னாண்டோ டெஸ்ட் வீரருக்கே உரிய பாணியில் மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் துடுப்பெடுத்தாடி 59ஆவது நிமிடத்தில் 20ஆவது பந்திலேயே  முதலாவது ஓட்டத்தைப் பெற்றார்.

திமுத் கருணாரட்ன தனது அரைச் சதத்தை 102 பந்துகளில் பூர்த்திசெய்ததுடன் 9 பவுண்ட்றிகளை அடித்திருந்தார்.

ஒரு தசாப்தத்துக்குப் பின்னர் பாகிஸ்தானில் முதல் தடவையாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப்படும் நிலையில் விளையாட்டரங்கினுள்ளும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கை ஊடகவியலாளர்களாகிய நாங்கள் சென்ற வாகனமும் பல இடங்களில் தடுக்கப்பட்டு அதிகாரிகள் மத்தியில் ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே விளையாட்டரங்கை நோக்கிய பாதையினுள் அனுமதிக்கப்பட்டது.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 2009இல் லாகூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் காலை இலங்கை அணியினர் பயணித்த பஸ்வண்டிமீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை.

உயிர் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் இங்கு வருகை தர மறுத்துவந்தன. பாதுகாப்பு சிறுகசிறுக வழமைக்குத் திரும்பிய பின்னர் 2015இல் ஸிம்பாப்வேயின் வருகையுடன் சர்வதேச கிரிக்கெட் மீண்டும் ஆரம்பமானது. எனினும் ஒரு தசாப்தத்தின் பின்னர் இன்றைய தினமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முதல் தடவையாக மலர ஆரம்பித்தது.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. டெஸ்ட் வல்லவர் தொடராகவும் விளையாடப்படுகின்றது. இரண்டாவது டெஸ்ட் பொட்டி கராச்சியில் 19ஆம் திகதி ஆரம்பமாகின்றது.