(ஆர்.யசி)

இலங்கை இராணுவம் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றது என சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் இலங்கையில் சிலரும் முன்வைக்கும் காரணிகள் உண்மைக்கு புறம்பானதும் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதுமான கருத்தாகும் என  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அத்துடன் கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவ அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் அச்செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது. இஸ்லாமிய மதத்தின் பெயரில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் போன்றதொரு சம்பவம் இடம்பெற இராணுவம் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்திற்கு கடந்த 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு  அவர் மேலும் அங்கு கூறியதாவது. 

இராணுவ சேவையானது தாய் நாட்டிற்கு சேவையாற்றும் பாரிய கடமையாகும். உலகில் உன்னதமான தொழிலாக இராணுவ சேவையுள்ளமையால் எப்போதும் அதை பெருமையுடனும், மரியாதையுடனும் பார்க்கவேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது,  அதை எந்த சந்தர்ப்பத்திலும் வீழ்ச்சியடைய விடக்கூடாது. இலங்கை இராணுவமானது கடந்த காலங்களில் நாட்டிற்கு பாரியசேவையை ஆற்றியுள்ளது. இதற்காக முழு நாடும் இராணுவத்திற்கு கடன்பட்டிருக்கிறது,  இந்த பெருமைமிக்க அமைப்பில் நீங்களும் அங்கத்தவர்களாய் இருப்பதை முன்னிட்டு நீங்கள் பெருமையடையுங்கள். அத்துடன் உங்களை சரியான தலைமைத்துவ படுத்தி முன்னோக்கி செல்வதற்கான இராணுவ தளபதி தற்போது உங்களுடன் உள்ளார். 

விடுதலைப்புலிகள் பயங்கரவாத்தை தோற்கடித்து எமது நாட்டில் சமாதான சூழ்நிலையை நிலை நாட்டிய இராணுவத்தை கௌரவமாக எமது நாட்டில் மதிக்கின்றார்கள். அதன் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள இராணுவ தலைமையகத்தை போன்று இன்று எமது இராணுவ தலைமையகமானது ஶ்ரீ ஜயவர்தனபுர பூமியில்  ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போது எமது இராணுவ வீரர்கள் கடந்த காலங்களில் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். இப்படியான சம்பவங்கள் வேதனைக்குரிய விடயமாக அமைகின்றது.  

எமது நாட்டில் ஏபரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உதிர்த்த ஞாயிறு தாக்குதலானது மிக கவலைக்குரிய விடயமாகும்.  நாட்டிலுள்ள உயர்ந்த பதவிகளிலுள்ள தலைமை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டும் தற்பொழுதும் 500 அங்கத்தவர்கள் காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றமை நாம் அறியக்கூடிய விடயமாக அமைகின்றது. இஸ்லாம் மதமானது பெரும் நற்பண்புகளை கொண்ட ஒரு மதமாகும். இதை பின் தொடரும் சில சதிகாரர்கள் கீழ்த்தரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆகையால் எமது நாட்டில் இப்படியான ஒரு நிலைமையை இன்னொரு முறை ஏற்படுவதற்கு தேசத்தின் பாதுகாவலராகிய இலங்கை இராணுவமானது இடமளிக்க கூடாது. 

தேசத்தின் பாதுகாவலர்களாகிய நாங்கள் எமது நாட்டைப் பாதுகாக்க மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாம் மிகவும் சிரமப்பட்டோம். தாமதமான செயற்பாடுகள் மற்றும் பிற  சிக்கல்களின் அடிப்படையில் நிலுவையில் உள்ள சிக்கல்களை நாங்கள் தீர்க்க வேண்டும்.  இராணுவ தளபதி என்னை முதலில் சந்தித்த போது தொழில்முறை முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயங்களைப் பற்றி என்னுடன் கலந்துரையாடினார். நாங்கள் ஏற்கனவே தீர்வு நடவடிக்கைகளைத் ஆரம்பித்தோம், ஆகையால் இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் இராணுவத்தில் இடம்பெறாது என்று நான் உங்கள் முன்னிலையில் உறுதியளிக்கின்றேன்.

ஒரு ஆலோசனையை வழங்கி அனைத்து அதிகாரிகளும் தங்கள் கீழ் உள்ள வீரர்களை தங்கள் சொந்த மகன்,  கணவர் அல்லது பேரன் என்று நாம் கருத வேண்டும். இராணுவ ஒழுக்கமானது அனைத்து தரப்பிலும் உயர்ந்த பட்சத்துடன் பேணி பாதுகாக்க வேண்டும். ஆகையால் ஒழுக்கத்தை மீறுவதை ஒரு போதும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். காரணம் இலங்கை இராணுவமானது சிறந்த சாரம்சத்தை கொண்ட ஒரு அமைப்பாகும்.  இராணுவ ஆக்கிரமிப்புகள் தொடர்பான விமர்சனங்கள் வெளிநாடுகளில் மட்டும் அல்லாது உள்நாட்டினில் பிரச்சாரமாகும் செய்திகள் உண்மைக்கு புறமானவையும் முற்றிலும் பொய்யான விடயமாகும் என்றார்.