மிக்கி ஆர்தர் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ளமை பாக்கிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு மிகவும் சாதகமான விடயம் என அணித்தலைவர் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

மிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை மிகவும் சாதகமான விடயம் எனக்குறிப்பிட்டுள்ள அவர் மிக்கி ஆர்தர் கடந்த மூன்று வருடங்களாக பாக்கிஸ்தான் அணியினருடன் நெருக்கமாகயிருந்தார், அவரிற்கு பாக்கிஸ்தானின் ஒவ்வொரு வீரர் குறித்தும் நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பந்துவீச்சாளர்கள் எவ்வாறு தயாராகின்றனர் என்பது கூட அவரிற்கு தெரியும் எதுஎப்படியென்றாலும் நாங்கள் சரியாக விளையாட வேண்டும் என திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானின் டெஸ்ட் கிரிக்கெட் மீள் எழுச்சிக்கு பங்களிப்பு வழங்குவது மகிழ்ச்சிகரமான விடயம் எனவும் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் சிரேஸ்ட வீரர்கள் மத்தியில் பாக்கிஸ்தான வருவது குறித்து தயக்கம் காணப்பட்டது ஆனால் ஒருநாள் தொடரில் விளையாடிய வீரர்கள் இங்குள்ள நிலைமை குறித்து தெரிவித்த பின்னர் நாங்கள் இங்கு வரத்தீர்மானித்தோம் எனவும் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் அனேகமான வீரர்கள் முதல்தடவையாக பாக்கிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.