(செ.தேன்மொழி)

கற்பிட்டி - கந்தக்குழி கடற்பகுதியில்  10 கிலோ கிராம் தங்க நகைளை கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்த முற்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தக்குழி கடற்பகுதியில் இன்று அதிகாலை கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி மற்றும் கந்தக்குழி பகுதியைச் சேர்ந்த 30 -45 வயதுக்கு இடைப்பட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 10 கிலோ கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த தங்கத்தின் பெறுமதி இதுவரையில் மதிப்பிடப்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் மீன்பிடி படகின் மூலம் இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.

பொலிஸார் சந்தேக நபர்களை நாளைய தினம் கற்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.