ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கும் ‘குயின்’ என்ற வலைதள தொடர் திட்டமிட்டபடி இம்மாதம் 14ஆம் திகதி வெளியாகும் என இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தயாராகியிருக்கும் வலைதள தொடர் ‘குயின்’. இந்தத் தொடரில் ஜெயலலிதாவாக நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்திருக்கிறார். அவரது தோழியாக நடிகை விஜி சந்திரசேகர் நடித்திருக்கிறார். இந்த வலைதள தொடரை கௌதம் மேனனுடன் இணைந்து பிரசாத் முருகேசன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்தத் தொடர் குறித்து ஜெயலலிதாவின் உறவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்நிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் கௌதம் மேனன்,“ திட்டமிட்டபடி இம்மாதம் 14ஆம் திகதி இந்த வலைதள தொடர், எம் எக்ஸ் ப்ளேயர் என்ற பிரத்யேக செயலியில் ஒளிப்பரப்பாகும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்தத் தொடரில் இளவயது ஜெயலலிதாவிற்கு அம்மாவாக நடிகை சோனியா அகர்வால் நடித்திருக்கிறார் என்பதும், இயக்குநர் ஸ்ரீதர் கேரக்டரில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர் குறித்து நடிகை ரம்யாகிருஷ்ணன் பேசுகையில்,“ எம்முடைய முதல் வலைத்தள தொடர். இந்த தொடரில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இதில் ஜெயலலிதாவின் பாடசாலை வாழ்க்கை முதல் அவர் நடிகையாகி, அரசியலில் நுழையும் வரையிலான வாழ்க்கை வரலாற்றை வலைதள தொடராக உருவாக்கியிருக்கிறார்கள்.  திரைக்கதையும், வசனங்களும் எம்மை ஈர்த்தன. இது தொடரின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.