(எம்.மனோசித்ரா)

கப்பல்துறை, வீதி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய நாடளாவிய ரீதியில் பெருந்தெருக்கள் தொடர்பில் எந்தவொரு பிரச்சினைகளையும் அமைச்சரிடம் கூறுவதற்கான சந்தர்பத்தை ஏற்படுத்தும் வகையில் ' அமைச்சருக்கு கூறுங்கள் ( Tell Minister )'  உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

இதன் மூலமாக தங்களுடைய பிரதேசங்களில் காணப்படுகின்ற பெருந்தெருக்கள் தொடர்பிலான பிரச்சினைகள், தெருக்களை உபயோகிக்கும் பொழுது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக குறித்த முகப்புத்தக பக்கத்தின் ஊடாக அமைச்சரிடம் முறையிடலாம். 

இதன் மூலம் இலங்கையிலுள்ள பெருந்தெருக்கள், அதிவேக பாதைகள் தொடர்பிலான பிரச்சினைகளை நேரடியாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல முடியும்.

பிரயாணங்களின் போது பயணிகள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் ,வாகனங்களை செலுத்தும் போது சாரதிகள் எதிர்நோக்குகின்ற வீதி சமிக்ஞைகள் தொடர்பிலான பிரச்சினைகள் , வீதி விளக்குகள் தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரை தெளிவூட்ட முடியும்.

இப்புதிய திட்டத்தின் மூலம் நாட்டினுள் ஒழுக்கமான வீதி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு தடங்களாக இருக்கும் சாரதிகள், பிரயாணிகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சர் நேரடியாக கவனம் செலுத்துவது விசேட அம்சமாகும்.