பின்லாந்து நாட்டில் 34 வயதான சன்னா மரின் என்ற பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பின்லாந்தில் தற்போது சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான 5 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமராக இருந்த ஆண்டி ரின்னி, மீது அந்நாட்டு தபால் துறை வேலை நிறுத்தத்தை சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

எதிர்ப்புக்கள் வலுத்ததை அடுத்து, அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த, சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த 34 வயதான சன்னா மரின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சன்னா மரின் தனது 27 வது வயதில் அவரது சொந்த ஊரான டம்பியரில் நகர சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு பின்லாந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த ஜூன் மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றார். 

ஆட்சியில் இருக்கும் கூட்டணி கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் 35 வயதிற்கு உட்பட்டவர்களே. இவர்கள் அனைவரும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். இவர்களில் சன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.எ

இது குறித்து பேசிய சன்னா மரின், “நான் எனது வயதை ஒரு பொருட்டாக கருதியதில்லை. மக்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்படுவதற்கான வழி குறித்து மட்டுமே சிந்திக்கிறேன். மேலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன” என்று கூறினார்.

தற்போது உலகில் உள்ள பிரதமர்களில் மிகவும் வயது குறைந்த பிரதமர் இவர் தான். இதற்கு முன்பு நியூலாந்தின் பெண் பிரதமரான  ஜெசிந்தா ஆர்டர்ன் (39) தான் வயது குறைந்த பிரதமராக கருதப்பட்டார்.